மீண்டும் இணையும் 'டாக்டர்' கூட்டணி?

மீண்டும் இணையும் 'டாக்டர்' கூட்டணி?
Updated on
1 min read

மீண்டும் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், வினய், யோகி பாபு, பிரியங்கா மோகன், கிங்ஸ்லி, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் படம் 'டாக்டர்' என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே, நெல்சன் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் உள்ளது. இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பாக முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து, இந்தப் படம் உருவாகும் எனத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in