

'ஜீவி' படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. இதில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வெற்றி.
வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் வெற்றி, மோனிகா, கருணாகரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஜீவி'. 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக விமர்சகர்கள் இந்தப் படத்தின் களம், திரைக்கதை அமைப்பு ஆகியவற்றை வெகுவாக பாராட்டினார்கள்.
தற்போது 'ஜீவி' படத்தின் 2-ம் பாகம் தயாராவது உறுதியாகியுள்ளது. இதனையும் வி.ஜே.கோபிநாத்தே இயக்கவுள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகனாக வெற்றி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் எடிட்டராக பணிபுரியவுள்ள ப்ரவீன் கே.எல்லிடம் கதையைக் கூறியுள்ளார் இயக்குநர் வி.ஜே.கோபிநாத். 'ஜீவி 2' கதையைக் கேட்டுவிட்டு ப்ரவீன் கே.எல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"'ஜீவி' திரைப்படத்தின் தொடர்ச்சியாக அருமையான ஒரு கதையைக் கேட்டேன். மீண்டுமொரு முக்கோண விதி, இம்முறை அதிக அழுத்தத்துடன். 'ஜீவி 2', இந்த குழுவினருக்குச் சிறப்பான படமாக அமையும்"
இவ்வாறு எடிட்டர் பிரவீன் கே.எல் தெரிவித்துள்ளார்.
இதில் வெற்றியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.