

மணிரத்னத்தை ரஜினி புகழ்ந்து பேசிய சம்பத்தை சத்யஜோதி தியாகராஜன் பகிர்ந்துள்ளார்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தள்ளிப் போகாதே'. தெலுங்கு நானி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'நின்னு கோரி' படத்தின் தமிழ் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்று அக்டோபர் 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இதனை முன்னிட்டு படத்தை விளம்பரப்படுத்தப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் படக்குழு. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கலந்து கொண்டார்.
இதில் சத்யஜோதி தியாகராஜன் பேசியதாவது:
"அதர்வாவை சின்ன வயதிலிருந்து தெரியும். அவருடைய அப்பா முரளி 'இதயம்' படம் பண்ணும் போது வீட்டிற்கு அழைப்பார். அப்போது சின்ன பையனாக அதர்வாவைப் பார்த்திருக்கிறேன். முரளியும் நானும் நல்ல நண்பர்களாகவே பழகிக் கொண்டிருந்தோம். பாணா காத்தாடி கதை வந்துச் சொன்னவுடன், இயக்குநர் பத்ரியும் முரளி சார் பையனை நடிக்க வைக்கலாம் என்று சொன்னார். அப்போது முரளியும் கதையைக் கேட்டார். ஏனென்றால் பையனை நல்லபடியாக சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தார். அந்தக் கதையைக் கேட்டு முரளிக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அதில் ரொம்ப நன்றாகவே நடித்திருந்தார் முரளி.
நானும் மணிரத்னமும் சின்ன வயதிலிருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். நிறையக் கதைகள் பேசியிருக்கிறோம். இருவருக்குமே சினிமா மீது அவ்வளவு ஆர்வம். அப்போது ஒரு நாள் மணிரத்னம் என்னிடம் ஒரு கதை இருக்கிறது, நம்ம பண்ணலாம் என்று கேட்டார். பல்லவி அனுபல்லவி என்ற கன்னடப் படமொன்றை மணிரத்னம் இயக்கியிருந்தார். அதைத் தயாரித்தவர் எனது அப்பா. அந்தப் படத்தைப் பார்த்தவுடன் எனக்கு மணிரத்னத்தின் மேக்கிங் ரொம்ப பிடித்திருந்தது.
ஆகையால் மணிரத்னம் படத்தை ஒப்புக் கொண்டு தயாரித்தோம். அந்தப் படம் வெளியான சமயத்தில் பெரிய வெற்றியில்லை என்றாலும் நன்றாக ஓடியது. அந்தப் படத்தின் மூலம் மணிரத்னத்துக்குப் பெரிய பெயர் வந்தது. அதில் எனக்குப் பெருமை. ரஜினி சார் என்னிடம் அந்த இயக்குநரைப் பற்றி பலரும் பேசுகிறார்கள், எனக்கு அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்றார். நானும் ஏ.வி.எம்மில் அந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டினேன்.
அதனைத் தொடர்ந்து மணிரத்னத்தைப் புகழ்ந்து பேசினார் ரஜினி சார். அதற்குப் பிறகு மணிரத்னம் பெரிய ஆளாக வளர்ந்துவிட்டார். அது எனக்குப் பெருமையான விஷயம். இன்றைக்கும் நானும் மணிரத்னமும் நண்பர்களாக இருக்கிறோம். "
இவ்வாறு சத்யஜோதி தியாகராஜன் பேசினார்.