

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டத்தினை ஒட்டி மார்ச் 20 ம் தேதி ஒரு நாள் படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது ஆண்டு பொது குழு கூட்டம் வரும் மார்ச் 20 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லுரி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டம் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது.
புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இது. நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) ஆகிய அமைப்புகள் அன்றைய தினம் பொதுகுழுவிற்காக படபிடிப்புகளை ரத்து செய்து விடுமுறை அளித்துள்ளது.
இந்த கூட்டத்தில் பழம்பெரும் நடிகர் பி.யூ.சின்னப்பாவின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்துதல், அவரது நுற்றாண்டு விழா வீடியோ மற்றும் நடிகர் சங்கம் செயல்பாடுகள் பற்றிய வீடியோ தொகுப்பும் திரையிடப்படும். அத்துடன் நடிகர் சங்கத்தின் டைரக்டரி வெளியிடு மற்றும் இணையதளம் வெளியீடும் நடைபெறும்.மேலும், தங்களது வாழ்கையை நாடகத்துறைக்கு அர்ப்பணித்த பழம்பெரும் கலைஞர்களை கௌரவித்து சுவாமி சங்கரதாஸ் கலைஞர் விருது மற்றும் பொற்கிழி வழங்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர் கருணாஸ் 2014 – 2015 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்ய பட்ட வரவு செலவு கணக்கு அறிக்கையை சமர்பிப்பார். பொருளாளர் கார்த்தி, சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும், பொது செயலாளர் விஷால், சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்களை குறித்தும் விளக்கி உரையாற்ற, துனண தலைவர் பொன்வண்ணனின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவு பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் நாடக கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர். நடிகர் சங்க உறுபினர்கள் அனைவரும் தங்களுடைய உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பேரவை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் நடிகர் சங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.