'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 2-ம் பாகம் எடுக்கவே கூடாது: சிவகார்த்திகேயன்

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 2-ம் பாகம் எடுக்கவே கூடாது: சிவகார்த்திகேயன்
Updated on
1 min read

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 2-ம் பாகம் எடுக்கவே கூடாது என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்தார். அவருடைய பாடல்களும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

அக்டோபர் 9-ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் 'டாக்டர்' படம் வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சிவகார்த்திகேயன். அப்போது, அவருடைய நடிப்பில் வெற்றியடைந்த படங்களின் இரண்டாவது பாகம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சிவகார்த்திகேயன் தெரிவித்ததாவது:

" 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் 2-வது பாகம் குறித்து சும்மா பேசினோம். ஆனால், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அது ஒரு எபிக் படம். நாங்கள் எங்களையே அறியாமல் ஜாலியாக எடுத்த படம். அதைத் திரும்ப எடுக்கவே முடியாது. 'ரெமோ' படத்தைத் தொடர முடியாது. ஆனால், அந்த நர்ஸ் கதாபாத்திரத்தை வைத்து வேண்டுமானால் வேறொரு படம் எடுக்கலாம்".

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in