நீச்சல் உடை அணிவதால் விவாகரத்தா? - வித்யுலேகா பதிலடி

நீச்சல் உடை அணிவதால் விவாகரத்தா? - வித்யுலேகா பதிலடி
Updated on
1 min read

நீச்சல் உடை அணிவது விவாகரத்துக்கு வழிவகுக்கும் என்கிற ரீதியில் கருத்துப் பதிவிட்டவர்களுக்கு நடிகை வித்யுலேகா பதிலடி கொடுத்துள்ளார்.

'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான வித்யுலேகா, நடிகர் மோகன்ராமின் மகள். 'ஜில்லா', 'வீரம்', 'வேதாளம்', 'பவர் பாண்டி' உள்ளிட்ட பட படங்களில் வித்யுலேகா நடித்துள்ளார். சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட வித்யுலேகா, சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்குபவர். தனது கருத்துகளை, தனக்கு வரும் கேள்விகளுக்கான பதில்களை, விமர்சனங்களைத் தொடர்ந்து தன் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் தேனிலவுக்காக மாலத்தீவுகளுக்கு வித்யுலேகா சென்றிருந்தார். அப்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படமும் இருந்தது. அந்தப் புகைப்படத்தின் கீழ் சிலர் எதிர்மறையாகக் கருத்துப் பதிவிட்டிருந்தனர். மேலும் சிலர் ’உங்களுக்கு எப்போது விவாகரத்து’ என்று கேட்டிருந்தனர்.

இதற்கெல்லாம் பதிலளித்திருக்கும் வித்யுலேகா, "எனக்கு எப்போது விவாகரத்து என்பது போன்ற கேள்விகள் என்னிடம் கேட்கப்படுகின்றன. நான் நீச்சல் உடையில் இருந்ததற்காகவா? 1920களிலிருந்து வெளியேறி 2021க்கு வாருங்கள். இந்த எதிர்மறை கருத்துகளால் பிரச்சினை இல்லை. ஆனால், ஒரு சமூகமாக நமது சிந்தனையோட்டம்தான் பிரச்சினை.

ஒரு பெண்ணின் உடைதான் அவரது விவாகரத்துக்குக் காரணமாக இருக்குமென்றால் சரியாக உடை அணிந்திருப்பவர்கள் அனைவரும் அவரவர் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் இல்லையா?

எந்தவித அச்சமும் இல்லாத ஒரு கணவர் எனக்குக் கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம். என்னைப் போலவே அவருக்கும் வித்தியாசமான நம்பிக்கைகள், நெறிமுறைகள் உள்ளன. இதற்கு பதில் சொல்லாமல் புறக்கணித்துவிடு என்றுதான் சொன்னார். ஆனால், என்னால் அப்படிக் கடந்து செல்ல முடியவில்லை.

வெறுப்பைக் காட்டுவர்களின் குறுகலான, நச்சு மனப்பான்மையையோ, வாழ்க்கையைப் பற்றிய அதீதமான பிற்போக்குத்தனமான பார்வையையோ என்னால் மாற்ற முடியாது. பெண்களையும் அவர்களுக்கு இருக்கும் தனித்துவத்தையும், பாலினப் பாகுபாட்டோடு, அடக்குமுறை பார்வையோடு, முற்றிலும் அவமதிக்கும் வகையில் நீங்கள் பார்க்கும் விதத்துக்கு எதிராக உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் உங்களை எதிர்த்து நிற்பார்கள் என்று நம்புகிறேன். வாழு, வாழவிடு" என்று காரசாரமாக பதிலளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in