

மென்பொருள் பொறியாளரான குருபிரசாத் (கவின்), சென்னைக்கு பணி மாற்றலில் வருகிறார். அங்கு மனிதவள அதிகாரியாக இருக்கும் ஹரிணியுடன் (அம்ரிதா) அவருக்கு முட்டல், மோதல் எனநகர்கிறது. ‘ஓவர் டைம்’ முடித்துவீடு திரும்புவதற்காக அலுவலகத்தின் லிப்டில் ஏறுகிறார். ஆனால்,லிப்ட் தனது கட்டுப்பாட்டில் இல்லைஎன்பதை உணர்ந்து பதற்றமாகிறார். அந்நேரம், ஹரிணியும் அதே லிப்ட்டில் வந்து ஏறிக்கொள்ள, எலியும் பூனையுமாக இருக்கும் இருவரும், அந்த அலுவலகமும் லிப்டும் தங்களுக்கு ஒரு பொறியாக மாறியிருப்பதையும், அவர்கள் தனிமையில் இல்லை என்பதையும் உணர்கின்றனர். அடுத்து வரும் 3 மணி நேரத்துக்குள் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்தாக வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அதற்காக என்னவெல்லாம் செய்தனர், அவர்களால் தப்பிக்க முடிந்ததா என்பது கதை.
திடீர் மின்தடை, பொருட்கள் நகர்வது, சாய்வது, உடைவது, அமானுஷ்ய நிழல்கள் என்று எல்லா பேய் படங்களிலும் பார்த்துபழக்கப்பட்ட வழக்கமான தருணங்கள்தான். ஆனால், ரசிக்கும்படி காட்சியமைப்பு செய்துள்ளனர். ‘லிப்ட்’டை முதன்மைப்படுத்தியது கதைக் களத்தை தனித்துக் காட்டுகிறது. லிப்டில் ஒரு கை வந்து தடுக்கும் காட்சி நச்! இந்த எல்லாகாட்சிகளையும் ரசிக்க முடிவதற்கு, வி.எஃப்.எக்ஸ், சவுண்ட் எஃபெக்ட்ஸ், பின்னணி இசை, ஒரே அலுவலகத்தையே கேமரா சுற்றிச் சுற்றி வந்தாலும் அலுப்புத் தட்டாமல் பார்க்க வைக்கும் ஒளிப்பதிவு என அனைத்து தொழில்நுட்ப அம்சங்களையும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர். அதனால் ‘கிளிஷே’ காட்சிகள்கூட கிலியைத் தருகின்றன.
இயக்குநர் வினித் வரபிரசாத், முதல் பாதியில் இடம்பெறும் அமானுஷ்ய காட்சிகளின் நீளத்தைகுறைத்திருந்தால், இரண்டாம் பாதியில் கிடைத்த விறுவிறுப்பை முதல் பாதிக்கும் கொடுத்திருக்கலாம்.
இரு பாடல்களை ரசிக்கும் விதமாகவும், பின்னணி இசையைகதைக் களத்துக்கான உயிர்ப்புடனும் தருகிறார் இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல்.
அறிமுகப் படம் என்று நம்பமுடியாதபடி குருபிரசாத்தாக நடித்திருக்கும் கவின், நாயகியுடன் சண்டையிட்டு, பயந்து, மருண்டு,உருண்டு, நடனமாடி ஜமாய்க்கிறார். அவருக்கு சற்றும் குறையாத பங்களிப்பை வழங்குகிறார் நாயகி அம்ரிதா. துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் பங்களிப்பையும் குறைகூறமுடியாது. ‘டைமிங்’ நகைச்சுவையில் உத்தரவாதத்துடன் சிரிக்க வைக்கும் ‘இரும்புத்திரை’ படப்புகழ் அப்துல், அப்ளாஸ் அள்ளுகிறார்.
அமானுஷ்யம், பேய் என தமிழ்சினிமா கைவிட மறுக்கும் களத்துக்குள் ஐ.டி. துறையை கொண்டுவந்து, அதற்குள், தொழில்நுட்ப அணியை சிறப்பாக பயன்படுத்தி களமாடியிருக்கிறது ‘லிப்ட்’. திரையரங்குகளில் பார்த்து, பயந்து, ரசிக்கவேண்டிய படம். கைபேசி திரையிலும் கவர்ந்து நம்மை பூட்டி வைத்துவிடுகிறது!