

இயக்குநர் கே.வி.ஆனந்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இருவரும் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ட்விட்டரில் வெளியிடப்பட்டது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'அனேகன'். இதைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்த கே.வி.ஆனந்த் அதில் நடிக்க ஆர்யா, ஜீவா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரை தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது.
ஆனால் கடந்த சில நாட்களாகவே இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக செய்திகள் கசிந்தன. அவை உண்மையாகும் வகையில் தற்போது விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அவரோடு டி.ராஜேந்தரும் இதில் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, புகைப்படத்தோடு ஏஜிஎஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
கே.வி.ஆனந்த் படங்களில் வழக்கமாக கதை, திரைக்கதை, வசனத்தில் பங்கெடுக்கும் எழுத்தாளர்கள் சுபாவும் இந்த படத்தில் பணியாற்றவுள்ளனர். கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் என்ற வித்தியாசமான இணை சேர்ந்திருப்பது பலருக்கும் இப்போதே ஆவலை உருவாக்கியுள்ளது.
படத்தின் நாயகி உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் அடுத்து வரும் நாட்களில் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று தெரிகிறது.