

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
'3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா தனுஷ். 2015-ம் ஆண்டு வெளியான 'வை ராஜா வை' படத்துக்குப் பிறகு எந்தவொரு படமும் இயக்காமல் இருந்தார். ஆனால், பல்வேறு கதைகள் எழுதி வந்தார்.
இறுதியாக தற்போது ஐஸ்வர்யா தனுஷின் அடுத்த படம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கான கதையை சஞ்சீவ் எழுதியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் குடும்பம் சார்ந்த த்ரில்லராக உருவாகிறது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் இன்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.