'புஷ்பா' வெளியீட்டுத் தேதியில் மாற்றம்
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா' படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்து வருகிறார்கள்.
கரோனா அச்சுறுத்தல் குறைந்துவிட்டதால், தற்போது முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் 'புஷ்பா' முதல் பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதே தேதியில் ரன்வீர் சிங் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள '83' திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 'புஷ்பா' படத்தினை ஒரு வாரத்துக்கு முன்பாக டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.
