

'டெம்பர்' ரீமேக்கில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது தொடர்பாக சிம்பு விளக்கம் அளித்திருக்கிறார்.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரும் வசூல் சாதனை புரிந்த படம் 'டெம்பர்'. இதனால் இப்படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு கடும் போட்டி நிலவி வந்தது. ஊழல் நிறைந்த இரக்கமற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் எப்படி ஒரு சம்பவத்தால் மாறுகிறார் என்பதே 'டெம்பர்' படத்தின் கதைக்களம்.
'இது நம்ம ஆளு' படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் மற்றும் விஜய் சந்தர் ஆகியோரது இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிம்பு. இதில் விஜய் சந்தர் இயக்கவிருக்கும் படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க இருக்கிறார். இப்படம் 'டெம்பர்' படத்தின் ரீமேக் என்றும், காஜல் அகர்வால் சிம்புவுக்கு நாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.
தற்போது 'டெம்பர்' ரீமேக்கில் விஷால் நடிக்க அனல் அரசு இயக்க இருக்கிறார். தாகூர் மது தயாரிக்க இருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'டெம்பர்' சர்ச்சை குறித்து சிம்புவிடம் கேட்ட போது, "நான் - விஜய் சந்தர் - மைக்கேல் ராயப்பன் மூவரும் இணைந்து படம் பண்ண இருக்கிறோம் என்பது மட்டுமே உண்மை. அதற்காக இரண்டு கதைகள் பேசியிருக்கிறோம், அதில் ஒன்று 'டெம்பர்' ரீமேக். நாங்கள் பண்ணும் படம் 'டெம்பர்' ரீமேக்கா என்பது குறித்து நீங்கள் தயாரிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும்.
'டெம்பர்' ரீமேக்கில் நான் நடிக்கவிருக்கிறேன் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லையே. தற்போது விஷால் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் மட்டுமே இதற்கு பதிலளிக்க முடியும்" என்று தெரிவித்தார்.