

படங்களை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் நிறைய பேர் விமர்சனம் செய்கிறார்கள் என்று தனஞ்ஜெயன் காட்டமாகத் தெரிவித்தார்.
ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கோடியில் ஒருவன்'. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தலுக்குப் பிறகு மக்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வந்த படம் 'கோடியில் ஒருவன்' என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்தது படக்குழு. இதற்கான சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தனஞ்ஜெயன் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.
மேலும், தனது பேச்சில் விமர்சகர்கள் தொடர்பாக தனஞ்ஜெயன் பேசியதாவது:
"வரும் திரைப்படங்களை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் நிறைய பேர் விமர்சனம் செய்கிறார்கள். இந்தச் சந்திப்புக்கு வந்துள்ள ஊடக நண்பர்கள் யாருமே அப்படிச் செய்வதில்லை. என்னிடமும் ஒரு யூடியூப் சேனல் இருக்கிறது என்று நினைத்து, ஒரு படத்தை சகட்டுமேனிக்கு குறை சொல்கிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு.
மீண்டும் மக்கள் திரையரங்குகளுக்கு வந்து படங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இல்லாத குறைகளைச் சொல்லி சிலர் தமிழ் சினிமாவைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே தமிழ் சினிமா வாழ்ந்தால் மட்டுமே இருக்க முடியும். தமிழ் சினிமாவை ஒழித்துவிட்டால், உங்களுக்கு எல்லாம் வேலையே கிடையாது".
இவ்வாறு தனஞ்ஜெயன் பேசினார்.