தரமான சம்பவம் இருக்கு: 'வலிமை' குறித்து கார்த்திகேயா பகிர்வு

தரமான சம்பவம் இருக்கு: 'வலிமை' குறித்து கார்த்திகேயா பகிர்வு

Published on

'வலிமை' படத்தில் தரமான சம்பவம் இருக்கு என்று வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் முடிவாகவில்லை. மேலும், இதில் அஜித்துடன் யாரெல்லாம் நடித்துள்ளார்கள் என்பதையும் படக்குழு அறிவிக்கவில்லை.

முதன்முறையாக இந்தப் படத்தில் நடித்துள்ள கார்த்திகேயாவின் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளார் கார்த்திகேயா. இந்தப் படத்தில் நடித்திருப்பது குறித்து முதன்முறையாக கார்த்திகேயா ட்வீட் செய்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில் கார்த்திகேயா கூறியிருப்பதாவது:

"இது என்னுடைய நாளை மிக மிக விசேஷமாக்கியுள்ளது. இப்போது நான் அதிகாரபூர்வமாகப் பதிவிடுகிறேன். ஆம், நான் 'வலிமை' படத்தில் நடிக்கிறேன். இந்த வாய்ப்பால் மிக பெருமையாகவும், நன்றி உடையவனாகவும் உணர்கிறேன். ஆம். தரமான சம்பவம் இருக்கு.

அதீத அன்பைப் பொழிந்த தல அஜித் ரசிகர்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள். அஜித் சாரின் திரை வாழ்வில் 'வலிமை' மறக்க முடியாத படங்களில் ஒன்றாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். அதற்காக என்னுடைய சிறப்பான உழைப்பையும் நான் வழங்குவேன்.

எனக்கு மிகவும் பிடித்த 'மங்காத்தா' படத்திலிருந்து அஜித் சாரும் நானும் இருக்கும் இந்த எடிட் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது".

இவ்வாறு கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in