

'பீம்லா நாயக்' படத்திலிருந்து வெளியாகியுள்ள ராணாவின் லுக்கைப் பாராட்டியுள்ளார் பிரித்விராஜ்.
மறைந்த திரைக்கதை ஆசிரியர் சச்சி இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'அய்யப்பனும் கோஷியும்'. இதில் பிஜுமேனன், பிரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு ரீமேக் தொடங்கப்பட்டது.
தெலுங்கு ரீமேக்கை சித்தாரா எண்டர்டையின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் பிஜு மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா ஆகியோர் நடித்து வருகிறார்கள். சாகர் கே.சந்திரா இயக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
'பீம்லா நாயக்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திலிருந்து பவன் கல்யாணின் லுக் வெளியிடப்பட்டுவிட்டது. நேற்று (செப்டம்பர் 20) ராணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய லுக்கை வெளியிட்டது படக்குழு. டேனியல் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராணா.
தனது கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராணாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரித்விராஜ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"பல்வேறு காரணங்களால் 'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படம், தனிப்பட்ட முறையில் எனக்கு மிக மிக விசேஷமானது. நான் நடித்ததில் பெருமைப்படும் கதாபாத்திரங்களில் ஒன்றாக கோஷி குரியன் என்றுமே இருக்கும். இந்தப் படத்தின் ரீமேக் குறித்து நானும் சச்சியும் பல முறை பேசியிருக்கிறோம். ஆனால், தெலுங்குத் திரையுலகின் பெரும் நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் பங்கெடுத்து இந்தப் படத்தை இவ்வளவு பிரம்மாண்டமானதாக ஆக்குவார்கள் என்று நாங்கள் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.
பவன் கல்யாண், த்ரிவிக்ரம், ரவி.கே.சந்திரன் ஆகிய திறமைசாலிகள் முன்னெடுக்க தமன் இசையமைக்க, இந்தப் படம் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதை நாம் உறுதி செய்து கொள்ளலாம். ஆனால், எனக்கு இதில் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி. என் அன்பு நண்பர், சகோதரர் ராணா டகுபதி, தெலுங்கில் கோஷி குரியன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதுதான். சகோதரா, நீங்கள் பார்க்க அட்டகாசமாக இருக்கிறீர்கள். எனக்கு இருந்ததை விட உங்களிடம் அதிக நயம் உள்ளது.
டேனியல் சேகராக ராணா டகுபதியை அறிமுகம் செய்யும் காணொலியைப் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.
பிகு: வேட்டியில் கலக்குகிறீர்கள் சகோ".
இவ்வாறு பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.