'அனபெல் சேதுபதி' பேய்ப் படம் அல்ல: இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன்

'அனபெல் சேதுபதி' பேய்ப் படம் அல்ல: இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன்
Updated on
1 min read

'அனபெல் சேதுபதி' பேய்ப் படம் அல்ல என்று இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அனபெல் சேதுபதி'. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது.

செப்டம்பர் 17-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் பிரபல இயக்குநர் சுந்தர்ராஜனின் மகன் ஆவார். தனது மகன் இயக்குநராக அறிமுகமாவதை முன்னிட்டு இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் சுந்தர்ராஜன் பேசியதாவது:

"நான் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. எனது ஆரம்பக் கால படங்களுக்கு விமர்சனம் தந்த பத்திரிக்கையாளர்கள் இங்கு உள்ளனர். எனது திரைப்பயணத்திற்கு ஆதரவும், பாராட்டும் தந்த பத்திரிக்கையாளர்கள் என் மகனுக்கும் அதே ஆதரவை தந்து வளர்த்து விட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

எனக்குப் படத்தின் கதை தெரியாது படம் பற்றி எதுவும் தெரியாது, அவனே வளர்ந்து வரட்டும் என்று அவன் விஷயத்தில் எதிலும் தலையிடவில்லை. தயாரிப்பாளர் முழுப்படத்தையும் பார்த்து விட்டு நன்றாக வந்திருப்பதாக போன் செய்து சொன்னார் சந்தோஷமாக இருந்தது. பாடல்கள், ட்ரெய்லர் பார்த்த போது அவனிடம் முதல் பட தயக்கம் எதுவும் இல்லாமல், தெளிவாகச் செய்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன்"

இவ்வாறு சுந்தர்ராஜன் பேசினார்.

இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் பேசியதாவது:

"தயாரிப்பாளர் தான் இந்தப்படம் இவ்வளவு பெரிதாக வரக்காரணம். விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா மேடம் என இப்படத்தில் என்னை நம்பி நடித்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் பேய்ப் படம் அல்ல. இது ஒரு ஃபேண்டஸி காமெடி படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.

அப்பாவிடம் மனிதப் பண்புகளைத் தான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் இயக்கத்தை நான் இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் தான் கற்றுக்கொண்டேன். தொடர்ந்து காமெடி படங்களே செய்ய ஆசை இல்லை, வித்தியாசமான களங்களில் படங்கள் செய்வேன். நடிக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை, தொடர்ந்து படங்கள் இயக்குவதில் தான் கவனம் செலுத்தவுள்ளேன்"

இவ்வாறு தீபக் சுந்தர்ராஜன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in