Published : 13 Sep 2021 07:56 PM
Last Updated : 13 Sep 2021 07:56 PM

'லிஃப்ட்' வெளியீட்டில் சிக்கல்: தயாரிப்பாளர் Vs விநியோகஸ்தர்

கவின் நடித்துள்ள 'லிஃப்ட்' படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் இருவருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு கவின் நாயகனாக நடித்துள்ள படம் 'லிஃப்ட்'. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு நாயகியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் உரிமையை லிப்ரா நிறுவனம் கைப்பற்றியது. அவ்வப்போது 'லிஃப்ட்' வெளியீடு குறித்த வதந்திகளுக்கு எல்லாம், லிப்ரா நிறுவனம்தான் பதிலளித்து வந்தது.

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு 'லிஃப்ட்' உரிமை தங்களிடம்தான் உள்ளது என்று லிப்ரா நிறுவனம் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்திருந்தது. அப்போதே, 'லிஃப்ட்' பட வெளியீட்டில் பிரச்சினை இருப்பது தெரியவந்தது.

தற்போது 'லிஃப்ட்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈகா என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தமிழ்த் திரைப்படமான 'லிஃப்ட்'-ன் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை மட்டும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் நிறுவனத்திடம் கடந்த ஏப்ரல் மாதம் 2021-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதை அடுத்து ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி ரவீந்தர் சந்திரசேகரன் நடந்து கொள்ளாததால் எங்களது ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கும், ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் இடையே செய்த ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்பட்டது.

இதனை அடுத்து ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ நபரான திலீப் குமார் சென்னை காவல் ஆணையரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது புகார் அளித்தார். எனவே தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனிடம், 'லிஃப்ட்' தமிழ்த் திரைப்படம் சம்பந்தமான எந்த ஒரு காப்புரிமையும் இல்லை. எனவே தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனிடம் 'லிஃப்ட்' தமிழ்த் திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு வியாபாரத்திற்காக எந்த ஒரு நிறுவனமும் தொடர்புகொள்ள வேண்டாம் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

'லிஃப்ட்' தமிழ்த் திரைப்படத்தின் அனைத்து அதிகாரபூர்வ செய்திகளும் ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினால் மட்டுமே ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், ஊடகத்திற்கும் தெரிவிக்கப்படும்".

இவ்வாறு ஈகா என்ட்ர்டெயின்மென்ட் தெரிவித்துள்ளது.

'லிஃப்ட்' தயாரிப்பாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே லிப்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'லிஃப்ட்' படத்தின் தமிழ்நாடு உரிமையை எனது லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது போல் 50% முன்பணம் செலுத்தியுள்ளோம். மீதி 50% தொகை படத்தின் வெளியீட்டிற்கு முன் செலுத்தவேண்டும் என ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலைக்குப் பின் திரையரங்குகள் திறந்தவுடன் அக்டோபரில் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடலாம் என முடிவு செய்து, கடந்த ஒரு மாதமாகத் தயாரிப்பாளரைத் தொடர்புகொள்ள முயன்று வருகிறோம். ஆனால், அவர் எங்கள் அழைப்புகளை எடுப்பதில்லை. இது சம்பந்தமாகத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம். சங்கத்திலிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் 'லிஃப்ட்' படத் தயாரிப்பாளர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

தற்போது 'லிஃப்ட்' படத் தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் உடன் செய்த ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்பட்டது எனத் தானாகவே ஒரு வேடிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளார். 'லிஃப்ட்' படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம்தான் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்திக் கொள்கிறோம்."

இவ்வாறு லிப்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x