

முன்னாள் முதல்வர், மறைந்த ஜெயலலிதாவின் ‘பயோபிக்’ என்று விளம்பரப்படுத்தியே ‘தலைவி’ திரைப்படத்தை படமாக்கினார்கள். ஆனால், தற்போது ‘இது கற்பனைக் கதை’ என்று பல்டி அடித்திருக்கிறார் இயக்குநர் விஜய். ஆளுமைகளின் தோற்றங்களை அப்படியே வைத்துக்கொண்ட இயக்குநர், நிஜ பெயர்களைப் பயன்படுத்தாமல், ஜெயா, எம்ஜேஆர், ஆர்என்வீ, கருணா, சசி என சுருக்கியும், இனிஷியல்களை மாற்றியும் பயன்படுத்தியுள்ளார். பெயர்களை மாற்றிவிட்டு சுவாரஸ்யமான பொய்களை கலந்து ‘இது பயோபிக்’ என்று நிறுவ முயல்வது தவறான முன்னுதாரணம்.
1965-ல் ஜெயலலிதா திரையுலகில் அறிமுகமானதில் தொடங்கி 1991-ல்தமிழக முதல்வர் ஆவது வரை அவரதுவாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை பூசி மெழுகி திரைக்கதை எழுதியுள்ளனர். திரையுலகில் ஜெயா நுழைந்த பிறகு எம்ஜேஆர் உடனான நட்பின் தோற்றம், பின்னர் அது காதலாக மாறுவது, அதை விரும்பாத ஆர்என்வியுடன் ஜெயாவின் மோதல், கருணா - எம்ஜேஆர் இடையிலான நட்பு மற்றும் முரண், எம்ஜேஆரின் தனிக்கட்சி தொடக்கம், அதனால் ஜெயா சந்திக்கும் பிரிவு, ஜெயாவின் அரசியல் நுழைவு என வளரும் திரைக்கதை, எம்ஜேஆர் மறைவுக்கு பிறகு, அவரது இடத்தை அடைந்து ஜெயா முதல்வர் ஆவதுடன் படம் முடிகிறது.
‘தலைவி’ என்ற தலைப்புக்கு ஏற்ப,ஒரு வெற்றிகரமான திரைத் தாரகையின் தனிப்பட்ட வாழ்வும், அரசியல்வெற்றியும் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான காட்சியமைப்புகள், ஒளிப்பதிவு, கலை இயக்குநரின் பணி,பின்னணி இசை என அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் கச்சிதமாகப் பொருந்திப்போய், மேக்கிங், நட்சத்திரத் தேர்வு,கார்க்கியின் வசனம் ஆகிய அம்சங்கள் சிறந்த பொழுதுபோக்கு படமாக ஆக்கிவிடுகின்றன.
ஜெயாவாக கங்கணா ரணாவத் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பை தருகிறார்.எம்ஜேஆராக அரவிந்த்சாமி நடிப்பை குறைசொல்வதற்கு இல்லை. ஆர்என்வி-யாக வரும் சமுத்திரக்கனி தனது வில்லன் நடிப்புக்கு திரையரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறார். ஜெயாவின் உதவியாளர் தம்பி ராமையா, கருணாவாக வரும் நாசர், எம்ஜேஆர் மனைவியாக மதுபாலா ஆகியோரும் மனதில் பதிகின்றனர்.
காலகட்டத்தை கச்சிதமாக முன்னிறுத்தியுள்ள ராமகிருஷ்ணா - மோனிகா நிகோட்ரியின் கலை இயக்கம், அதை தன் ஒளியமைப்பு, வண்ணங்களால் காட்சிக்குள் கொண்டுவந்த விஷால்விட்டலின் ஒளிப்பதிவு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை தூக்கிப்பிடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை ஆகிய அம்சங்கள் உயர்தரம்.
ஜெயலலிதாவின் ‘பயோபிக்’காக அல்லாமல், சில உண்மைகள், பல பொய்கள் கலந்த சுவாரஸ்யமான காதல், அரசியல் நாடகமாக ‘தலைவி’யை தாராளமாக ரசிக்கலாம்!