

தனது படத்தில் கெளதம் மேனன் நடிக்க முடியாமல் போனது ஏன் என்று இயக்குநர் வினித் சீனிவாசன் விளக்கம் அளித்திருக்கிறார்.
மலையாளத் திரையுலகில் பல தளங்களில் இயங்கும் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார் இயக்குநர் வினித் சீனிவாசன். மலையாளத்தில் 'ஒரு வடக்கன் செல்ஃபி' படத்துக்கு கதை எழுதி நடித்திருந்தார் வினித் சீனிவாசன். அக்கதையின் நாயகனாக வரும் நிவின் பாலி, கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக சேர விரும்புவது போல திரைக்கதை அமைத்திருந்தார்.
நிவின் பாலி நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தில் ரஞ்சி பனிக்கர், கெளதம் மேனன், ஸ்ரீநாத் பாசி, சாய் குமார், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக வினித் சீனிவாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்ஜியம் (Jacobinte Swargarajyam) என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படம் 2016 கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. ஆனால், அதில் கெளதம் மேனன் நடிக்கவில்லை. அப்படத்தில் கெளதம் மேனன் நடிக்க முடியாமல் போனது ஏன் என்றும் வினித்சீனிவாசன் விளக்கியுள்ளார்.
"'ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்ஜியம்' படப்பிடிப்பை முடித்ததில் இருந்தே இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளவிரும்பினேன். எங்கள் படத்தில் கௌதம் மேனன் சார் ஒரு முக்கிய பங்களிப்பு செய்துள்ளார் என்பது தெரிந்திருக்கும்.
துபாயில் படப்பிடிப்பை நடத்துவதற்கு திட்டமிட்டு டிசம்பர் முதல் வாரத்தில் அவரது தேதிகளைப் பெற்றோம். ஆனால் பின்னர் சென்னையில் மழை வெள்ள பாதிப்பு நிகழ்ந்தது. விமான நிலையம் மூடப்பட்டது. நாங்கள் அவரை அழைத்து வரமுடியவில்லை. அதன்பின்னர் பல்வேறு காரணங்களால் இன்னொரு படப்பிடிப்புக்கான திட்டமிடல் என்பது சாத்தியமில்லாமலே போய்விட்டது. கௌதம் சாரும் அவரது புதிய படத்தில் பிஸியாக இருந்தார். நாங்களும் மிகவும் வேலை நெருக்கடிகளில் ஓடியவாறு இருந்தோம்.
எனினும், கடவுள் அருளால் கௌதம் மேனன் சார் செய்ய இருந்த கேரக்டருக்கு மிகப்பொருத்தமான அறிமுக நடிகர் ஒருவர் எங்களுக்கு கிடைத்தார். கௌதம் மேனன் சாருடன் பணியாற்றக்கூடிய ஒரு அருமையான வாய்ப்பை இழந்துவிட்டேன். ஆனால் இதுவே கூட ஓர் அற்புதமான திறமையுள்ள நடிகர் கிடைப்பதற்கு காரணமாகிவிட்டது. எல்லாமே நல்லதுக்காக என்றுகூட இப்போது தோன்றுகிறது." என்று தெரிவித்திருக்கிறார் வினித் சீனிவாசன்.