சுதாவிடம் சில விஷயங்கள் கற்றேன்: பாலாவின் இறுதிச்சுற்று அனுபவங்கள்

சுதாவிடம் சில விஷயங்கள் கற்றேன்: பாலாவின் இறுதிச்சுற்று அனுபவங்கள்
Updated on
2 min read

'இறுதிச்சுற்று' பார்க்கும் போது, 5, 6 விஷயங்கள் இயக்குநர் சுதாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என இயக்குநர் பாலா தெரிவித்திருக்கிறார்.

மாதவன், ரித்திகா, நாசர், ராதாரவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் சுதா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'இறுதிச்சுற்று'. சசிகாந்த் மற்றும் சி.வி.குமார் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை யு.டிவி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், பல்வேறு திரையரங்குகளில் 'இறுதிச்சுற்று' படத்துக்கு காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படம் குறித்து முன்னணி இயக்குநர் பாலா அளித்திருக்கும் வீடியோ பேட்டியில் படக்குழுவினர் அனைவரையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார். அப்படம் குறித்து இயக்குநர் பாலா கூறியிருப்பது, "இந்திய சினிமாவில் விளையாட்டு சம்பந்தப்பட்ட அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். கிரிக்கெட், ஹாக்கி தெரியும் என்பதால் படங்கள் நல்லாயிருந்ததே தவிர என்னை பாதிக்கவில்லை. எனக்கு குத்துச்சண்டை என்றால் என்னவென்றே தெரியாது. அப்படின்னா என்ன என்று புரியவைத்து, அதில் எத்தனை சுற்று இருக்கின்றன என விளக்கி அதில் என்னை உணர்ச்சியடைய வைத்துவிட்டார்.

மற்ற படங்களைப் பார்க்கும் போது எனக்கு அழுகை வரவில்லை. இப்படத்தைப் பார்த்த போது பல இடங்களில் அழுதிருக்கிறேன். அப்படி ஒரு துல்லியமான உணர்ச்சிகள், திரைக்கதை, எடிட்டிங், நடிகர்களின் நடிப்பு, இசை, எல்லாத்துலயுமே அருமையாக இருந்தது. படமாக எடுக்கும் போது ஏதாவது ஒரு குறை என் கண்ணில் தட்டுப்படும். என் படங்களில் நிறைய குறைகள் தெரியும், இப்படத்தில் குறைகளே என் கண்ணில் படவில்லை. அற்புதமான படம், அதில் சந்தேகமே இல்லை.

மொத்த படமுமே என்னை பாதித்துவிட்டது. இது மட்டும் தான் என்னை பாதித்தது என்று சொல்ல முடியாது. இந்த மாதிரியான படங்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும் என்றால் படம் முடிந்து ரோலிங் டைட்டில் முடிவடையும் வரை இருந்து கறுப்பு ஸ்கிரீன் வரும் வரை நின்று மரியாதை செலுத்த வேண்டிய படம் இது.

ரித்திகாவின் நடிப்பு முழுவதுமே சுதாவின் நடவடிக்கைகள் தான். சுதாவின் சுறுசுறுப்பு, துறுதுறுவென இருப்பதை எல்லாம் அந்த பெண்ணுக்கு திணித்து நடிக்க வைத்திருக்கிறாள். மாதவனின் சிறந்த நடிப்பு என்றால் இந்த படம் தான். இடைவேளை காட்சியில் மாதவன் நடித்துவரும் போது எனக்கு எழுந்து நின்று கைதட்ட வேண்டும் என தோன்றியது. நல்ல படமாக இருக்கும் என நம்பித்தான் வந்தேன், ஆனால் இவ்வளவு நல்ல படமா என்று மலைத்துப் போய்விட்டேன்.

இயக்குநர் சுதா இப்படத்தில் உறவுகளை கையாண்டு இருக்கும் விதம் கண்ணில் ஒத்திக் கொள்வதைப் போல இருந்தது. இப்படியெல்லாம் நமக்கு உறவுகள் வேண்டுமே என்று ஒரு ஏக்கத்தையே உருவாக்கியது.

200, 300 படங்கள் பண்ணிய இசையமைப்பாளர் பண்ணிய பின்னணி இசை போல இருந்தது. நிறைய இடங்களில் வசனம் இல்லை, பின்னணி இசையை சரியாக அமைத்து கொடுத்த சந்தோஷ் நாராயணுக்கு தலை வணங்க வேண்டும்.

ரசிகன் தனி, நான் தனி என்பது கிடையாது. நானும் ரசிகர்களில் ஒருவன் தான். இப்படத்தின் எந்த காட்சிகளில் எல்லாம் கைதட்ட வேண்டும் என்று நினைத்தேனோ, அதற்கு எல்லாம் திரையரங்கில் கைத்தட்டுவார்கள். 10, 15 இடத்தில் எழுதேன், 15 இடத்தில் கைத்தட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். படம் முடிவடையும் போது எழுந்து நின்று கைதட்ட வேண்டும் என்று நினைத்தேன். இதெல்லாம் திரையரங்கில் நடந்திருக்கும்.

ஒரு நல்ல படத்துக்கு, திருட்டு வி.சி.டி என்பது பாதிப்பை ஏற்படுத்தும். மிக நல்ல படத்துக்கு திருட்டு வி.சி.டி என்பது ஒரு ட்ரெய்லர் மாதிரி தான். அவர்களே ஒரு குற்ற உணர்ச்சியாக நினைத்து, திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பார்கள்.

நமக்கு ஒரு மொழி கவர்ச்சியும், இனக் கவர்ச்சியுமே உண்டு. 'மில்லியன் டாலர் பேபி' படத்தை விட எனக்கு 'இறுதிச்சுற்று' படம் தான் சிறந்த படமாக தோன்றுகிறது. இயக்குநர் மணி சாருக்கு பெருமை சேர்த்துவிட்டார் இயக்குநர் சுதா. என்னுடன் ஒரு படத்தில் தான் பணியாற்றி இருக்கிறார். இப்படம் பார்க்கும் போது, 5, 6 விஷயங்கள் அந்த பெண்ணிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.

பெண் இயக்குநர் என்ற வார்த்தையை உபயோகப்பதே ஒரு பாவம். இயக்குநர்களில் ஆண், பெண் என என்ன இருக்கிறது. 'இறுதிச்சுற்று' படத்தின் ஒட்டுமொத்த குழுவுக்குமே இது தான் ஆரம்பச்சுற்று. அடுத்ததாக என்ன பண்ணப் போகிறார்கள் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார் பாலா.

இயக்குநர் பாலா அளித்திருக்கும் வீடியோ பேட்டி:

</p>

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in