முடிவுக்கு வந்தது 'டாக்டர்' வெளியீடு விவகாரம்

முடிவுக்கு வந்தது 'டாக்டர்' வெளியீடு விவகாரம்
Updated on
1 min read

'டாக்டர்' திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணத்தால், இந்தப் படத்தை முதலில் நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்தது படக்குழு. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இது தகவலாக வெளியானவுடன், திரையுலகினர் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது 'டாக்டர்'. ஓடிடி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியுள்ளது. 'டாக்டர்' படக்குழுவினரின் இந்த முடிவால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் உற்சாகமாகியுள்ளனர். ஆயுதபூஜை விடுமுறைக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in