ஏழை நாட்டில் நடிகர்கள் ரூ.100 கோடி சம்பளம் வாங்குவது அயோக்கியத்தனம்: வேலு பிரபாகரன் ஆவேசம்

ஏழை நாட்டில் நடிகர்கள் ரூ.100 கோடி சம்பளம் வாங்குவது அயோக்கியத்தனம்: வேலு பிரபாகரன் ஆவேசம்
Updated on
1 min read

ஏழைகளின் நாட்டில் நடிகர்கள் ரூ.100 கோடி சம்பளம் வாங்குவது அயோக்கியத்தனம் என்று இயக்குநர் வேலு பிரபாகரன் பேசியுள்ளார்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள படம் ‘ஜாங்கோ’. இந்தியாவின் முதல் டைம் - லூப் வகை திரைப்படம் என்று விளம்பரப்படுத்தப்படும் இந்தப் படத்தில் சதீஷ்குமார், மிருணாளினி ரவி, கருணாகரன், வேலு பிரபாகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (செப். 06) சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வேலு பிரபாகரன் பேசியதாவது:

''தெரிந்தோ தெரியாமலோ இந்த நாட்டு மக்களின் மூளையாக இருக்கக்கூடிய சினிமாவுக்குள் நாம் நுழைந்துவிட்டோம். நிறைய சினிமாக்காரர்கள் சினிமாவை மட்டுமே பின்தொடர்கிறார்கள். ஆனால், சி.வி.குமார் மட்டுமே சினிமாவோடு சேர்த்து சமூகத்தையும் பின்தொடர்கிறார்.

சினிமா என்பது சமூகத்தை பிரதிபலிக்கக்கூடிய ஒரு விஷயம். இது சி.வி.குமாருடைய காலகட்டம். தமிழ் சினிமாவை அடுத்த காலகட்டத்துக்கு நகர்த்தியவர் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். உலகிலேயே அதிகமாக சினிமாக்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் நாம். ஆனால், உலகத் தரத்தில் நாம் எங்கிருக்கிறோம் என்று தெரியவில்லை. இந்தி நடிகர்கள், இயக்குநர்களை விட அதிக சம்பளம் பெறும் நடிகர்கள், இயக்குநர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

இங்கு நான் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த நாடு ஏழைகளின் நாடு. ஒரு நடிகர் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். ஒரு நடிகர் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். 100 நாட்கள் நடித்துவிட்டு 100 கோடி ரூபாய் வாங்குது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளும் அப்படித்தான். அதனால்தான் நடிகர்களுக்கும் அந்த ஆசை வருகிறது''.

இவ்வாறு வேலு பிரபாகரன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in