தமிழக அரசுக்கு வசந்தபாலன் நன்றி

தமிழக அரசுக்கு வசந்தபாலன் நன்றி
Updated on
1 min read

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சட்டத் திருத்தத்திற்கு இயக்குநர் வசந்தபாலன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் துணிக்கடைகள், நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்ற இன்று சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1947ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் இந்த சட்ட முன்வடிவைப் பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்தச் சட்டத் திருத்தத்தைத் தாக்கல் செய்திருப்பதற்கு சமூக வலைதளத்தில் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்தச் சட்டத்திருத்தம் தொடர்பாக இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"தமிழக அரசுக்கு நன்றி. என் 'அங்காடித் தெரு' திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. 'அங்காடித் தெரு' திரைப்படத்தில் தொடர்ந்து நின்றுகொண்டே வேலை செய்வதால் கால்களில் ஏற்படக்கூடிய வெரிக்கோஸ் நோய் பற்றிக் கூறியிருப்பேன். உங்களுக்கு நினைவிருக்கலாம்".

இவ்வாறு வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'அங்காடித் தெரு' திரைப்படம் முழுக்கவே கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் அவலங்களைப் பற்றியதுதான். ஆகையால் இவருடைய வரவேற்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in