

'இது நம்ம ஆளு' படத்தில் இடம்பெற இருக்கும் கெளரவ வேடத்துக்கு ஹன்சிகாவை அணுக படக்குழு முடிவு செய்திருக்கிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் 'இது நம்ம ஆளு'. குறளரசன் இசையமைக்கும் இப்படத்தை டி.ராஜேந்தர் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. மார்ச் மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். பிப்ரவரி 3ம் தேதி சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு 'இது நம்ம ஆளு' படத்தின் இசை வெளியிடப்பட்டது.
'மாமன் வெயிட்டிங்' என்ற பாடலை சிம்பு - ஆண்ட்ரியாவை வைத்து காட்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. அதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கப்பட இருக்கிறது. இப்படத்தின் முதல் பாதியின் பின்னணி இசை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து வைத்துவிட்டார் இயக்குநர் பாண்டிராஜ். இரண்டாம் பாதிக்கான பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் கெளரவ வேடம் ஒன்று இருக்கிறது. அக்காட்சிகளில் சிம்புவுடன் நடிக்க ஹன்சிகாவை அணுக படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. 4 நாட்கள் மட்டுமே கொடுத்தால் மொத்த காட்சிகளையும் காட்சிப்படுத்திவிடலாம் என்று அவரிடம் கேட்க இருக்கிறார்கள்.
மீண்டும் சிம்புவுடன் நடிப்பது குறித்து ஹன்சிகா என்ன சொல்லவிருக்கிறார் என்பது விரைவில் தெரிய வரும்.