'கசட தபற' படக்குழுவினருக்கு பாரதிராஜா பாராட்டு

'கசட தபற' படக்குழுவினருக்கு பாரதிராஜா பாராட்டு
Updated on
1 min read

'கசட தபற' படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினரைப் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பாரதிராஜா.

சிம்புதேவன் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள படம் 'கசட தபற'. வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், சாந்தனு, ரெஜினா, பிரேம்ஜி, வெங்கட் பிரபு, விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்குப் பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தற்போது 'கசட தபற' படத்தைப் பார்த்துவிட்டு பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

"திரைப்படங்களை தியேட்டரில் ரசிகர்கள் பார்வைக்கு எடுத்துச் செல்வதில் தற்பொழுது வணிகம் சார்ந்து பெரும் நெருக்கடியும், சவால்களும் நிறைந்துள்ளன. ஆனால், படைப்பாளி என்பவன் ஏதோ ஒரு ஊடகத்தின் வாயிலாகத் தன் படைப்புகளை மக்கள் மத்தியில் கொண்டுசென்று, கலைக்காக அவன் தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறான்.

உண்மையான கலைஞனுக்குப் பொருளாதாரம் இரண்டாம் பட்சம்தான். கரோனா காலத்தில் நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் சிறந்த கலைநுட்ப எழுத்தாளன் இயக்குநர் சிம்புதேவன் எழுதி இயக்கியுள்ள 'கசட தபற' தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நானும் பார்த்தேன்.

மிகச் சிறந்த திரைப்படம். ஆறு அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் மிக நேர்த்தியான திரைக்கதையையும், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களையும் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு எடிட்டர்கள், ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு கதைக் களம்.

ஆனால், ஒரே நேர்க்கோட்டில் மிகச்சிறப்பான திரைக்கதை எழுதி இயக்கிய சிம்புதேவனுக்கும், கரோனா காலத்தில் அனைவருக்கும் வேலை கொடுப்பதற்காகத் தயாரிப்பாளராக மாறிய எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் ரவிச்சந்திரனுக்கும் அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்".

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in