

'விசாரணை' மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இதுவரை பார்த்ததில்லை என்று ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் லைக்கா நிறுவனம் வாங்கியிருக்கிறது.
பல்வேறு திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்ற இப்படம் நாளை (பிப்ரவரி 5) வெளியாக இருக்கிறது. இப்படத்தைப் பார்த்த பல்வேறு தமிழ்த் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளையும், இயக்குநர் வெற்றிமாறனுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்தவண்ணம் இருக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவருக்கும் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
'விசாரணை' படம் குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் "விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இதுவரை பார்த்ததில்லை. உலகப் படவரிசையில் ஒரு தமிழ்ப் படம். வாழ்த்துக்கள் வெற்றிமாறன் - தனுஷ்" என்று தெரிவித்திருக்கிறார்.