

'பாகுபலி' படத்தில் தான் நடித்த காட்சியின் புகைப்படங்களைப் பகிர்ந்து உத்வேகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜான் கொக்கென்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்டது. இதில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார் ஜான் கொக்கென்.
இதற்கு முன்பு 'பாகுபலி', 'கே.ஜி.எஃப் 1', 'வீரம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், 'சார்பட்டா பரம்பரை' படத்தில் வேம்புலியாக நடித்ததால் அனைவருடைய பாராட்டையும் பெற்றார். பலரும் 'பாகுபலி' படத்தில் இவர் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது.
தற்போது 'பாகுபலி' படத்தில் தான் வரும் காட்சியின் புகைப்படத்தைப் பகிர்ந்து ஜான் கொக்கென் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நான் ’பாகுபலி’யில் இப்படி இருந்தேன். நடிகராகி எனது ஆரம்ப நாட்களில் நான் செய்த மிகச்சிறிய வேடம் அது. அந்தப் படத்தில் எத்தனை பேர் என்னை அடையாளம் கண்டிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் எந்த வேடத்தில் அப்படத்தில் நடித்தேன் என்பதற்கு ஆதாரமாக இதோ இந்தக் காட்சி.
அந்தக் காட்சிக்காக நான் படப்பிடிப்பில் இணைந்த நாட்கள் நினைவில் பசுமையாக இருக்கின்றன. அப்போது, ஒருநாள் நானும் மிகப்பெரிய கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அந்த நாள் 'சார்பட்டா' மூலம் எனக்குக் கிடைத்தது. இந்தப் புகைப்படத்தை நான் இங்கு பெருமிதத்துடன் பகிர்கிறேன்.
அஜித் சார் கூறியதுபோல், வாழ்க்கையில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் வரலாம். ஆனால் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்பு நாளில் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எட்ட முடியாதது எதுவும் இல்லை. ஆகையால், எப்போதும் நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள். உங்களுக்கு இருப்பது ஒரு வாழ்க்கையே. அந்த வாழ்க்கையில் உங்களின் கனவுக்காகப் போராடுங்கள்”.
இவ்வாறு ஜான் கொக்கென் தெரிவித்துள்ளார்.