இது நம்ம ஆளு கவுரவத் தோற்றம்: ஹன்சிகா விளக்கம்

இது நம்ம ஆளு கவுரவத் தோற்றம்: ஹன்சிகா விளக்கம்
Updated on
1 min read

'இது நம்ம ஆளு' படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிப்பது குறித்து படக்குழுவினர் யாருமே தன்னை அணுகவில்லை என்று ஹன்சிகா தெரிவித்தார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் 'இது நம்ம ஆளு'. குறளரசன் இசையமைத்து வரும் இப்படத்தை டி.ராஜேந்தர் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. மார்ச் மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். பிப்ரவரி 3ம் தேதி சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு 'இது நம்ம ஆளு' படத்தின் இசை வெளியிடப்பட்டது.

'மாமன் வெயிட்டிங்' என்ற பாடலை சிம்பு - ஆண்ட்ரியாவை வைத்து காட்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இப்படத்தில் கவுரவ தோற்றம் ஒன்று இருக்கிறது. அக்காட்சிகளில் சிம்புவுடன் நடிக்க ஹன்சிகாவை அணுக படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும், 4 நாட்கள் மட்டுமே கொடுத்தால் மொத்த காட்சிகளையும் காட்சிப்படுத்திவிடலாம் என்று கேட்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ஹன்சிகாவிடம் 'இது நம்ம ஆளு' கெளரவ தோற்றம் குறித்து கேட்ட போது, "அச்செய்தியில் உண்மையில்லை. கவுரவ தோற்றம் தொடர்பாக என்னை யாரும் அணுகவில்லை" என்று தெரிவித்தார்.

இப்படத்தின் உரிமையை கைப்பற்றி இருக்கிறது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். மார்ச் மாத இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in