

போலி சான்றிதழ் பற்றிய கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட படம், 'ஈட்டி' வெற்றிக்குப் பிறகு அதர்வா நடிப்பில் வெளியாகும் படம், ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் சந்தோஷ் இயக்கத்தில் உருவான முதல் படம், அதர்வா - கேத்ரின் தெரஸா இணைந்து நடித்த முதல் படம் என்ற இந்த காரணங்களே 'கணிதன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
'கணிதன்' ட்ரெய்லர் தந்த நம்பிக்கையில் படம் பார்க்கும் ஆவலுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.
'கணிதன்' கணக்கு சரியாக இருக்குமா? பார்க்கலாம்.
கதை: தொலைக்காட்சி நிருபராக இருக்கும் அதர்வா பிபிசி தொலைக்காட்சியில் பணிபுரிய விரும்புகிறார். அங்கு வேலைக்கு சேர முயற்சிக்கும்போது போலி சான்றிதழ் மூலம் போலீஸில் சிக்குகிறார். அதர்வா யாரால் சிக்கவைக்கப்பட்டார்? அதற்குப் பிறகு என்ன ஆகிறார்? போலி சான்றிதழ் கும்பலை எப்படி கண்டுபிடிக்கிறார்? அதற்காக அதர்வா சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? என்பது மீதிக் கதை.
போலி சான்றிதழ் என்ற அட்டகாசமான ஒன் லைன் பிடித்து அதையே படம் முழுக்க பரவவிட்டதற்காக இயக்குநர் சந்தோஷைப் பாராட்டலாம்.
ஆனால், இந்த ஒன் லைன் மட்டுமே அசத்தலாக இருக்கிறது. திரைக்கதை லாஜிக் இல்லாமல், நம்பகத்தன்மையைக் கொடுக்காமல் ஏனோ தானோ என்று நகர்கிறது.
தொலைக்காட்சி நிருபர் கதாபாத்திரத்துக்கு அதர்வா சரியாகப் பொருந்துகிறார். அதர்வாவின் வேகம், துணிச்சல், கோபம் என எல்லா இடங்களிலும் அவரின் குரலும், உடல் மொழியும் உழைத்திருக்கிறது. நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை.
கேத்ரின் தெரஸா வழக்கமான கதாநாயகிக்கான பங்களிப்பை செய்கிறார். டப்பிங் மட்டும் பொருந்தாமல் உறுத்துகிறது. சமயங்களில் கேத்ரின் பேசும் வசனங்கள் டப்பிங் காரணமாக இரட்டை அர்த்தத்தை கொடுத்துவிடும் சந்தர்ப்பமும் அமைகிறது.
தருண் அரோரா கம்பீரமான கதாபாத்திரத்துக்கு கச்சிதம். புத்திசாலி வில்லன் நேருக்கு நேர் கதாநாயகனை சந்திக்கும்போது மட்டும் காரணமே இல்லாமல் புஸ் ஆகிப் போகிறார்.
கருணாகரன், நரேன், பாக்யராஜ், சுந்தர் ராமு, மனோபாலா, ஆதிரா, கும்கி அஸ்வின் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
அர்விந்த் கிருஷ்ணாவின் கேமரா போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலின் நிழல் உலகத்தையும், சென்னை நகரத்தையும் அச்சு அசலாகக் காட்டுகிறது.
டிரம்ஸ் சிவமணியின் தடதடக்கும் இசை சில நேரங்களில் இனிமையாக இருந்தாலும், பல நேரங்களில் சங்கடத்தை வரவழைக்கிறது. ஐ விரல்கள் சிறகாய் முளைக்குதடி பாடலும், சேகுவேரா பாடலும் இம்சை தருகிறது. தம்மாதூண்டு கண்ணுக்குள்ள பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது.
புவன் ஸ்ரீனிவாசகன் கத்தரி போட வேண்டிய பாடல்கள், காட்சிகள் இருந்தும் சரியாக பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார்.
இயக்குநர் சந்தோஷ் 'ரமணா', 'துப்பாக்கி' படங்களில் இருந்து தன் படத்தை வடிவமைக்க வேண்டிய நிர்பந்தம் என்ன? இப்படிதான் உங்கள் குரு பக்தியை காட்ட நினைக்கிறீர்களா சந்தோஷ் சார்.
படம் முழுக்க புள்ளி விவரங்கள் சொல்கிறேன் என்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அது மிகப் பெரிய அலுப்பையும், சோர்வையும் வரவழைக்கிறது. இதுபோதாதென்று நான் கண்டுபிடிச்சிட்டேன். ஆதாரம் இதோ என்று வாய்மொழியில் சொல்லி சொல்லியே பிறகு விஷுவலாக காட்டுகிறார்கள்.
நல்ல கதையை வைத்துக்கொண்டு திரைக்கதையை சரியாக அமைக்காமல் எந்த லாஜிக்கையும் பார்க்காமல் விட்டதால் போலி சான்றிதழ் குறித்த நிழல் உலக கேள்விகள் துரத்திக் கொண்டே இருக்கின்றன. அதற்கான விடைகளை தொலைத்தவனாகவே 'கணிதன்' இருக்கிறான்.