'எதற்கும் துணிந்தவன்' திரையரங்குகளில் திருவிழாவாக இருக்கும்: சூரி

'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய சூரி.
'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய சூரி.
Updated on
1 min read

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம், திரையரங்குகளில் படம் பார்க்கும் ரசிகர்களுக்குத் திருவிழாவாக இருக்கும் என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்து வருகிறார். இதில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் சூரி கூறுகையில், " 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம், திரையரங்குகளில் ஒரு திருவிழாவாக இருக்கும். பாண்டிராஜ் சார் படங்களுக்கே உரிய குடும்ப சென்டிமென்ட், ஆக்‌ஷன் கலந்த படமாக இருக்கும். வழக்கமான காமெடியனாக அல்லாமல் வித்தியாசமாக நாயகனுக்கு எதிராக இருக்கும் வேடம். கதாநாயகியின் தாய்மாமா வேடம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை அன்று 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்புத் தளத்தில் சூரியின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினர். உடன் இயக்குநர் பாண்டிராஜ், நாயகன் சூர்யா, சத்யராஜ், சுனைனா உள்ளிட்டவர்களும் இருந்தனர்.

மேலும், சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடித்து வரும் 'உடன்பிறப்பு' திரைப்படத்தில் சூரி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுபற்றி அவர் கூறுகையில், " 'உடன்பிறப்பு' படத்தில் பிரிந்துபோன அண்ணன், தங்கையின் இரு குடும்பங்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் கதாபாத்திரம். காமெடியைத் தாண்டி உணர்வுபூர்வமான ஒரு கதாபாத்திரம்.

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்துடன் சமூகத்துக்கு மிக அவசியமான கருத்தும் படத்தில் இருக்கும். இரு குடும்பங்களை இணைக்க நான் எடுக்கும் முயற்சிகளால் ரசிகர்களை அழை வைத்துவிடுவேன்" என்று சூரி குறிப்பிட்டுள்ளார்.

’உடன்பிறப்பு’ திரைப்படத்தை ’கத்துக்குட்டி’ திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் இயக்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in