

ஜி.வி.பிரகாஷின் நடிப்புக்குத் தனது ட்விட்டர் பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
சீனு ராமசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இடிமுழக்கம்'. ஸ்கைமேன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் காயத்ரி, அருள்தாஸ், மனோபாலா, சவுந்தர்ராஜா, தேவராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளராக ரகுநந்தன் பணிபுரிந்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கியுள்ளது படக்குழு. இத்துடன் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டது.
தற்போது இதுவரை படமாக்கிய காட்சிகள் அனைத்தையும் பார்த்துவிட்டு ஜி.வி.பிரகாஷின் நடிப்பைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
" 'இடிமுழக்கம்' முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஆயத்தங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட படத்தின் ஒட்டுமொத்தக் காட்சிகளும் எடிட்டிங்கில் பார்த்த பிறகு தம்பி ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நடிப்பிற்காக விருதுகளும் வாழ்த்துகளும் உண்டு”.
இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
'இடிமுழக்கம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 2-ம் தேதி முதல் மீண்டும் தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கவுள்ளது.