விமானத்தில் என்னுடன் விரும்பி அமர்ந்த ரஜினிகாந்த்: சூரி நெகிழ்ச்சி

விமானத்தில் என்னுடன் விரும்பி அமர்ந்த ரஜினிகாந்த்: சூரி நெகிழ்ச்சி
Updated on
1 min read

'அண்ணாத்த' படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது தன் பக்கத்து இருக்கையில்தான் அமர வேண்டும் என்று ரஜினிகாந்த் விரும்பிக் கேட்டதாக நடிகர் சூரி பேசியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடினார் நடிகர் சூரி. இதை முன்னிட்டு பேட்டியளித்திருக்கும் சூரி இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ளார்.

" ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்குச் செல்ல புறப்பட்டதில் இருந்தே உற்சாகம் தொற்றிக்கொண்டது. வீட்டில் இருந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஓட்டலுக்குச் சென்றால் அங்கே சாருக்கும் அடுத்த அறையில் நான். சந்தோஷத்தில் பறக்கவே தொடங்கினேன்.

படப்பிடிப்புக்கு நான் சென்றபோதே அவர் தயாராக இருந்தார். ஒரு ரசிகனாக அவரைப் பார்க்கக் காத்திருந்தேன். அவரைச் சந்தித்தபோது இது கனவா? என்று கிள்ளிக்கொண்டேன். ‘ஓ..சூரி எப்படி இருக்கீங்க’ என்று வாஞ்சையோடு கேட்டார். ‘சிவகார்த்திகேயனுடன் உங்க கெமிஸ்ட்ரி சூப்பர்’ என்று சொல்லிவிட்டு அந்தப் படங்களை நினைவுபடுத்திச் சொன்னார். அதன் பிறகு செட்டில் நான் தயங்கி நின்றாலும் இடைவெளிகளில் அழைத்து அருகில் அமரவைத்து, உரையாடி, கூச்சம் போக்கினார்.

அவர் பேசப்பேச சிறுவயதில் அவர் படங்களைப் பார்க்க பட்ட பாடுகள்தான் நினைவுக்கு வரும். 'தளபதி' படத்தின்போது அந்த ஸ்டில்களைப் புதுச் சட்டைகளில் வைத்து அயர்ன் பண்ணி ஒட்டி அணிந்துகொண்டு படத்துக்குப் போனது, அதற்காக வீட்டில் வாங்கிய அடிகள் இதெல்லாம் நினைவுக்கு வரும். அவர் சினிமாவில் வரும்போது தொண்டை வலிக்கும் அளவுக்குக் கத்தியிருக்கிறேன்.

ஒரு மிகப் பெரிய இயக்குநர், தலைசிறந்த சூப்பர் ஸ்டார் என 'அண்ணாத்த' படமே என் வாழ்வில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் என்ற பிரமிப்பு எல்லாம் அவர் பழகிய விதத்தில் போயே விடுகிறது. அப்படிப் பழகுகிறார். அதுதான் அவரை உச்சத்தில் வைத்திருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து ஊருக்குத் திரும்பும்போது அவர் இருக்கைக்கு அடுத்த இருக்கை. அவரே அப்படிப் போடச் சொல்லியிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் நான் விமானத்துக்கு மேலேயே பறந்துதான் வந்தேன்.

அந்தப் பயணத்தின்போது என்னைப் பார்த்து ‘நான் உங்களுக்கு கம்ஃபர்டபிளாக இருந்தேனா...?’ என்று கேட்க அசந்துபோனேன். நான் சினிமாவுக்கு வந்த பலனையே அடைந்துவிட்டேன். கடவுளையே பார்த்ததுபோல் இருக்கிறது என்றேன். வாழ்த்து சொன்னார்" என்று சூரி பகிர்ந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in