வடிவேலு - ஷங்கர் சமரசம்: இம்சை அரசன் படப் பிரச்சினைக்குத் தீர்வு

வடிவேலு - ஷங்கர் சமரசம்: இம்சை அரசன் படப் பிரச்சினைக்குத் தீர்வு
Updated on
1 min read

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தொடர்பான விவகாரத்தில் ஷங்கர் - வடிவேலு இருவருக்கும் இடையேயான பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்தது. பிறகு வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது. இதனால் வடிவேலுவால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதற்குப் பிறகு 'கத்தி சண்ட', 'மெர்சல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும், முழுமையாக அவரால் திரையுலகில் கவனம் செலுத்த முடியவில்லை.

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் தொடர்பாகத் தயாரிப்பாளர்கள் சங்கம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் ஷங்கர் - வடிவேலு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், சுமுகமாக எந்தவொரு முடிவுமே எட்டப்படவில்லை. கடந்த ஜூன் மாதம் மீண்டும் சமசரப் பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், "எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் '23-ம் புலிகேசி 2' திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே, விரைவில் வடிவேலு மீண்டும் முழு வீச்சில் நடிக்கத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதை முன்வைத்தே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in