

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் 'மிருதன்' திரைப்படம் 'ஏ' சான்றிதழுடம் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
'தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் படம் 'மிருதன்'. லட்சுமி மேனன் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை சக்தி செளந்தர் ராஜன் இயக்கி வருகிறார். இமான் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றி இருக்கும் ஐங்கரன் நிறுவனம், பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவித்தது. மேலும், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அனைத்துமே துரிதப்படுத்தப்பட்டன.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடித்து சென்சார் அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இப்படத்துக்கு 'ஏ' சான்றிதழ் அளித்தார்கள். இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்தது.
தொலைக்காட்சி திரையிடலுக்கு என்று தனியாக எடிட் செய்யப்பட்டு சென்சார் செய்ய வேண்டும், உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருந்ததால் படத்தை சீராய்வுக் குழுவுக்கு (REVISION COMMITEE) திரையிட முடிவு செய்திருக்கிறார்கள்.
மேலும், சீராய்வுக் குழு என்ன முடிவு எடுத்தாலும் படத்தை பிப்ரவரி 19ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தமிழ் திரையுலகில் தயாராகும் முதல் ஜாம்பி (zombie) வகையிலான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் நீளம் 1:48 மணி நேரம் மட்டுமே எனவும் படக்குழு அறிவித்திருக்கிறது.