Published : 02 Feb 2016 10:49 am

Updated : 02 Feb 2016 10:52 am

 

Published : 02 Feb 2016 10:49 AM
Last Updated : 02 Feb 2016 10:52 AM

ரஹ்மான் இசையில் பாடுவது ஆனந்த அனுபவம்: பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம் நேர்காணல்

திரைப்படத்தில் இவர் முதன்முதலில் பாடியிருக்கும் நான்கு பாடல்களுக்கும் மகத்தான வரவேற்பு. இசைத் துறையில் வேக வேகமாக முன்னேறி வரும் இளம் பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீ ராம்தான் அவர். அவருடன் ஒரு சந்திப்பு.

அமெரிக்காவில் வளர்ந்த உங்களால் எப்படி இவ்வளவு சுத்தமாக தமிழில் பாட முடிகிறது?


நீங்கள் குறிப்பிடுவது போல் நான் அமெரிக்காவில் வளர்ந்தவன்தான். ஆனால், சென்னைப் பையன். பிறந்தது மயிலாப்பூரில்தான். 1991-ல் என் குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தது. அங்கே என் அம்மா இசை வகுப்புகள் நடத்தினார். அந்த இசை வகுப்புகளில் அம்மா எனக்கும் அருணகிரி நாதரின் திருப்புகழ் உட்பட சில பாடல்களைக் கற்றுத் தருவார். என் சகோதரி பல்லவி ஸ்ரீராம் பரத நாட்டியப் பயிற்சி மேற்கொண்டார். என் தாத்தா சி.ஆர்.ராஜகோபாலன் கர்னாடக இசை யில் தேர்ச்சி பெற்றவர். இசை எனக்கு இயற்கையாகவே வந்தது. 1995 முதல் கோடைக் காலங்களிலும் டிசம்பர் சீஸனிலும் சென்னைக்கு வருவோம். நிறைய கச்சேரிகள் கேட்போம். 2001-ல் பி.எஸ்.நாராயணஸ்வாமியிடம் இசை கற்க ஆரம்பித்தேன். இதுதான் என் தொடக்கம்.

மேற்கத்திய இசையில் எப்படி நாட்டம் வந்தது?

அமெரிக்காவில் இருக்கும்போது ரேடியோவில் ரிதம்ஸ் அண்ட் ப்ளூஸ், ஜாஸ் போன்ற மேற்கத்திய இசையைத் தொடர்ந்து கேட்பேன். இதற்கும் கர்னாடக இசைக்கும் தொடர்பு இருப்பதை உணர முடிந்தது. கர்னாடக இசையில் உள்ள கமகங்கள் அவற்றின் பிரயோகங்கள் எல்லாம் மேற்கத்திய இசையை சுலபமாக அணுகுவதற்கு எனக்கு உதவின.

தொழில்நுட்பம் சார்ந்த இசைத்துறை பட்டப்படிப்பு பயின்றவர்தானே நீங்கள்?

சான்பிரான்சிஸ்கோவில் பள்ளிப் படிப்பு முடித் தேன். அதன் பிறகு பெர்க்லி இசைக் கல்லூரியில் இசையமைத்தல் மற்றும் பொறியியல்ரீதியான இசை அணுகுமுறை பற்றிய பட்டப்படிப்பு படித்தேன். பாடல் எழுதுவது, அதற்கான இசைக் கோர்வை அமைப்பது, பாடுவது, மூச்சுவிடும் முறை ஆகிய நுணுக்கங்களைக் கற்றேன். தொழில்முறையாக இசையை மேற்கொண்டு எடுத்துச் செல்லும் வழிமுறைகளை இதன்மூலம் கற்க முடிந்தது.

மேற்கத்திய இசைக்கும் கர்னாடக இசைக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?

இரண்டு விதமான இசையைக் கையாளும்போதும் என் குரல் வளத்திலோ, அதன் தன்மையிலோ எந்த மாற்றத்தையும் உணர முடியவில்லை. இரண் டிலும் அடிவயிற்றில் இருந்துதான் குரல் எழுப்பிப் பாட வேண்டும். மேற்கத்திய இசையை உச்சஸ்தாயியில் பாடும் போது சில சமயம் மேலெழுந்த வாரியாக போலியாக பாடுவது (பால்செட்டொ) என்ற ஒரு வழி உண்டு. ஆனால், நான் உருவாக் கிய பாடல்களில் இந்த பால் செட்டொ இருக்காது. மேற்கத்திய இசையைப் பாடும்போது தேவையெனில் கர்னாடக இசை உத்திகளைப் பயன்படுத்துவேன். கர்னாடக இசை பாடும்போது துளியும் கலப்படம் இருக்காது.

யூ டியூபில் நீங்களும், உங்கள் பாடல்களும் ரொம்பவும் பாப்புலர். அது எப்படி சாத்தியமானது?

யூ டியூபில் ஏற்கெனவே பிரபலமான பல பாடல்களை என் குரலில் பாடி வெளியிடும் கவர் வெர்ஷன்களை வெளியிட்டேன். என் மேற்கத்திய இசைப் பாடல்களை யும் யூ டியூபில் பதிவு செய்தேன். இதன் மூலம் இசை ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டேன். விளம் பரமே இல்லாமல் என் பாடல் களைப் பார்த்தவர்களின் எண் ணிக்கை பல மில்லியன்களைத் தாண்டியது.

திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு எவ்வாறு அமைந்தது?

எனது யூ டியூப் பதிவுகளில் இருந்து ஒரு பாடலை ஏ.ஆர். ரஹ்மானுக்கு மெயில் செய் தேன். அவரிடம் வாய்ப்புக் கேட்டு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான பாடகர்களின் குரல்களில் இருந்து என் குரலை அவர் தெரிவுசெய்தது தெய்வச் செயல். ‘அடியேய்’ பாடலைப் பாடுவதற்காக ரஹ்மானை முதன்முதலில் அவரது இசைக் கூடத்தில் சந்தித்தேன். அவர் எனக்கு ஒரு கதாநாயகன் மாதிரி. அவர் அருகே நிற்கிறேன் என்பதை நம்பவே இயலவில்லை.

ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியபோது, அமெரிக்காவில் வாழும் அனைத்து இந்தியர்களும் தங்கள் வெற்றி யாகவே பாவித்தார்கள். என் போன்றவர்களுக்கு அவருடைய வெற்றி ஊக்க மருந்தாக அமைந்தது.

‘அடியேய்’ பாடலை நான் பாஸ்டனில் இருந்தபடியே பதிவுசெய்தேன். அவர் ஸ்கைப் மூலம் வழிமுறைகளை சொல்லிக் கொடுத்தார். மணிரத்னத்தின் ‘கடல்’ படத்துக்கான பாடல் அது. பாடல் வெளியீட்டு விழாவுக்கு இந்தியா வந்தபோது மணிரத்னத்தின் பாராட்டையும் பெற்றேன். அந்தப் பாடலை தெலுங்கிலும் பாடினேன். சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் 30 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் ரஹ்மான் அந்தப் பாடலை என்னை பாட வைத்து எனக்குப் பெருமை சேர்த்தார்.

இயக்குநர் ஷங்கர் படத்தில் பாடியதைப் பற்றிச் சொல்லுங்களேன்...

ஷங்கரின் ‘ஐ’ படத்துக்காக ‘என்னோடு நீ இருந்தால்’ என்கிற பாடலை ரஹ்மான் என்னை உச்சஸ் தாயியில் பாட வைத்தார். பாடல் பதிவின்போது அவர்கள் இருவருமே இருந்தார்கள். ரஹ்மானின் இசை பதிவுக் கூடத்தில் பாடுவதே ஓர் அலாதியான ஆனந்த அனுபவம். இசை பதிவுக்குப் பிறகு ஷங்கர் என்னை பாராட்டினார்.

அனிருத் இசையில் பாடியது எப்படி இருந்தது?

‘நானும் ரௌடிதான்’ படத்தில் ‘எனை மாற்றும்...’ என்ற பாடலை அனிருத் இசையில் சான்பிரான்ஸிஸ் கோவில் இருந்தபடியே பாடினேன். அனிருத் இந்தப் பாடலை அற்புதமாக உருவாக்கியிருந்தார்.

உங்களின் இசைத்துறை கனவுகளை எங்களிடம் பகிர்ந்துகொள்ளுங்களேன்...

இசைத்துறையில் எனக்கு மூன்று கனவுகள். ஒன்று, கர்னாடக இசை கச்சேரிகள் செய்வது. அடுத்தது, சொந்தமாக இசையமைப்பது. மூன்றாவது பின்னணிப் பாடுவது. இந்த மூன்று கனவுகளுமே இறையருளால் நிறைவேறி வருகின்றன. மூன்றுமே பெரிய சவால்கள்தான். அவற்றை எதிர்கொண்டு வெற்றிப் பாதையில் குதிரையைச் செலுத்துவது நல்லதொரு அனுபவமாகவே இருக்கிறது.

இளைஞர்களின் ’துள்ளிசை’யாக சமீபத்தில் வெளி வந்துள்ள ‘தள்ளிப் போகாதே...’ பாடலைப் பற்றி..

நான் பாடிய நான்காவது பாடல் இது. கௌதம் வாசுதேவ மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம்பெறும் ‘தள்ளிப் போகாதே’பாடலை யூ டியூபில் பல லட்சம் ரசிகர்கள் கேட்டு ரசித்தவண்ணம் உள்ளார்கள். கவிஞர் தாமரையின் மென்மை நிறைந்த வார்த்தைகளுக்கு, அதனினும் சிறப்பான ஓர் இசையைக் கொடுத்து அதை மேலும் மென்மையாக்கி வெற்றிப் பாடலாக்கியுள்ளார் ரஹ்மான். டிசம்பர் இசை விழாவில் பாட வந்த எனக்கு ‘தள்ளிப் போகாதே’ புத்தாண்டு பரிசாகும். சமீபத்தில் நடந்த ‘நெஞ்சே எழு’ இசை நிகழ்ச்சியில் நான் பாட வந்தபோது இந்தப் பாடலை ரசிகர்கள் முன்னிலையில் ஒளிபரப்பினார்கள். ரசிகர்களின் ஆரவார ஒலி இன்னும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

உங்கள் தனி இசைக் கோப்புப் பணி எந்த நிலை யில் உள்ளது?

2009 முதல் தனிப் பாடல்களை ஆங்கிலத்தில் எழுதி இசையமைத்து வருகிறேன். இப்போது அமெரிக்கா வின் பிரபல இசையமைப்பாளர் ஒருவருடன் இணைந்து ‘இன்சொம்னியா’ என்ற இசை கோப்பு ஒன்றை உருவாக்கி வருகிறேன். நாம் ஈடுபடும் துறையில், வேலையில் ஒருமனதாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பது நான் கண்ட உண்மை.


ரஹ்மான்இசைபாடல்ஆனந்த அனுபவம்பின்னணிப் பாடகர்சித் ஸ்ரீராம்நேர்காணல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author