

தொடர்ச்சியாக தரக்குறைவான வார்த்தைகளால் காயப்படுத்தி வரும் சிம்பு ரசிகர்கள் மீது புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக 'மிமிக்ரி' சேது கூறியிருக்கிறார்.
விஜய் டிவியில் ஞாயிறு தோறும் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி 'கலக்கப் போவது யாரு'. இந்நிகழ்ச்சியில் இருக்கும் நடுவர்களில் மிமிக்ரி சேதுவும் ஒருவர். நாளை (பிப்ரவரி 7) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் சிம்புவை மிகுதியாக கலாய்த்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து சிம்புவின் ரசிகர்கள் சேதுவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில் இருப்பதால் மிமிக்ரி சேது வெளியிட்டுள்ள ஆடியோ தொகுப்பில் கூறியிருப்பது:
""கடந்த 3 நாட்களாக சிம்புவின் ரசிகர்கள் தொலைபேசி மூலமாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் தரக்குறைவான வார்த்தைகளால் மிகவும் காயப்படுத்தி வருகிறார்கள். வரும் ஞாயிறு அன்று 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் சிம்புவை நான் அவதூறாக பேசப் போவதாக யாரோ வதந்தியைப் பரப்பி விட்டார்கள். ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை.
நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். நானும் உங்களைப் போல சிம்புவின் தீவிரமான ரசிகன் தான். நான் வெளியூர் படப்பிடிப்பில் இருப்பதால் சென்னை வந்தவுடன் எனது வழக்கறிஞரின் ஆலோசனையின் படி புகார் அளிக்க இருக்கிறேன். தயவு செய்து பரவும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்" என்று தெரிவித்திருக்கிறார்.