

'ரெமோ' படத்திற்காக சிவகார்த்திகேயன் சிறப்பு ஒப்பனை செய்துகொள்வதால், படப்பிடிப்பில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜா தனது தனது 24 AM ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் மிகவும் மெனக்கிட்டு வருவதாக படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். "அதிகாலையிலேயே படப்பிடிப்புக்கு வந்து மேக்கப் போடுவதற்கு அமர்ந்துவிடுவார். மேக்கப் முடிவதற்கு சுமார் 3 முதல் 4 மணி நேரம் ஆகும். அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும். வெயில் கடுமையாக இருப்பதால், வியர்க்க ஆரம்பித்துவிட்டால் மேக்கப் கலைந்துவிடும். இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து வருகிறார்" என்று தெரிவித்தார்கள்.
இதுவரை இல்லாத அளவுக்கு சிவகார்த்திகேயன் மேக்கப்பில் கவனம் செலுத்தி நடித்துவருவதால், படப்பிடிப்பு தளத்திலும் கடும் கெடுபிடிகள் இருக்கிறது. யாருமே செல்போனில் படம் எடுக்கக் கூடாது, படப்பிடிப்பு தளத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. இப்படத்துக்காக சிவகார்த்திகேயனின் உழைப்பை வீடியோவாக காட்சிப்படுத்தி வருகிறார்கள். அதனை படம் வெளியாகும் சமயத்தில் யு-டியுப் தளத்தில் வெளியிட்டு படத்தை விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
மேலும், இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மேற்பார்வையாளராக 'நான் ஈ', 'புலி' ஆகிய படங்களுக்கு பணியாற்றி இருக்கும் கமலக்கண்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர் தற்போது 'பாகுபலி 2' படத்துக்கு கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.