பொன்.ராம் இயக்கத்தில் லாரன்ஸ் இணைய வாய்ப்பு

பொன்.ராம் இயக்கத்தில் லாரன்ஸ் இணைய வாய்ப்பு
Updated on
1 min read

'ரஜினி முருகன்' படத்தைத் தொடர்ந்து பொன்.ராம் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் லாரன்ஸை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலன்று வெளியான 'ரஜினி முருகன்' படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த ஆண்டு வசூல் ரீதியில் பெரும் வரவேற்பு கிடைத்த முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்.ராம் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில், முதல் இரண்டு கதைகளுமே கிராமம் சார்ந்து இயக்கிய பொன்.ராம் இப்படத்தை நகரம் சார்ந்து இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இப்படத்தில் லாரன்ஸ் - சூரி இணை நடிக்கவிருக்கிறார்கள்.

தற்போது 'மொட்ட சிவா கெட்ட சிவா', அதனைத் தொடர்ந்து தான் இயக்கி நடிக்கவிருக்கும் படம் என மும்முரமாக இருக்கும் லாரன்ஸை இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். லாரன்ஸ் ஹைதராபாத்தில் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படப்பிடிப்பில் இருப்பதால் அவர் சென்னை வந்தவுடன் பொன். ராம் இயக்கத்தில் நடிப்பது பற்றி இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in