

'விசாரணை' திரைப்படம் எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.
தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் லைக்கா நிறுவனம் வாங்கி வெளியிட்டது.
பல்வேறு திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்ற இப்படம் பிப்ரவரி 5 வெளியானது. இப்படத்தைப் பார்த்த பல்வேறு தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளையும், இயக்குநர் வெற்றிமாறனுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
இப்படம் தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து 4.6 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். மேலும், முதலில் 180 திரையரங்குகளில் வெளியான இப்படம் இப்போது திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு 215 அரங்குகளாக ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மும்பையில் வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) தேதி சப்-டைட்டிலுடன் 'விசாரணை' வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மத்தியிலும் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.