

சித்தார்த் நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகி வெளியாகும் படம், ஹீரோயின் இல்லாத படம், ஒரே பாடல் இடம்பெற்றுள்ள படம் என்ற இந்த காரணங்களே 'ஜில்.ஜங்.ஜக்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
படத்தின் டீஸரும், ட்ரெய்லரும் கல்ட் காமெடி படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியதால் ஆர்வமுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.
'ஜில்.ஜங்.ஜக்' எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா?
கதை: சித்தார்த், சனந்த், அவினாஷ் ஆகிய மூவரிடமும் காரை ஒரு இடத்தில் தரவேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதில் சில சதிகள், தடைகள் குறுக்கிடுகின்றன. அந்த சதிகளை உடைத்தார்களா? தடைகளைத் தாண்டினார்களா? கார் என்ன ஆனது? அதை யாரிடம் ஒப்படைத்தார்கள் என்பது மீதிக் கதை.
தமிழில் ஒரு கல்ட் காமெடி படம் கொடுக்க முயற்சித்ததற்காக இயக்குநர் தீரஜ் வைத்திக்கு லட்சம் லைக்ஸ்.
சின்ன சின்னதாய் பித்தலாட்டம் செய்யும் சித்தார்த் பெரிய கடத்தல் வேலையை செய்ய ஏற்கும் ஜில் கதாபாத்திரத்துக்கு முழுவதுமாக பொருந்திப் போகிறார். லோக்கலாகப் பேசும் வசன உச்சரிப்பும், உடல் மொழியும் கச்சிதம். எந்த இடத்திலும் உறுத்தாமல் நடித்திருக்கிறார்.
ஜங் கேரக்டரில் நடித்திருக்கும் அவினாஷ் ரகுதேவனின் டெரிபிக்கா கீது போன்ற ஸ்லாங் இயல்பாக ஈர்க்கிறது.
ஜக் கேரக்டரில் நடித்திருக்கும் சனந்த் ரெட்டி நிறைய அப்ளாஸ் வாங்குகிறார். குறிப்பாக சாய்தீனாவிடம் ஃபயர் சொல்லுமிடத்தில் தியேட்டர் வெடித்துச் சிரிக்கிறது.
பை கேரக்டரில் நடித்திருக்கும் பிபின் குரலுக்கு வாட்ஸ் அப் புகழ் ஹரி ஹர மகாதேவகி பேசுபவரின் குரலைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதனாலேயே என்னவோ அவர் பேசும் பெரும்பாலான வசனங்களில் இரட்டை அர்த்தம் இருப்பதால் புரிந்த ரசிகர்கள் சிரித்து தள்ளுகின்றனர்.
நரசிம்மன் கேரக்டரில் நடித்த நாகாவின் உகாண்டா எபிஸோடுக்கு ரசிகர்களிடத்தில் அதிக வரவேற்பு கிடைத்தது.
ராவுத்தராக வரும் ராதாரவி, தெய்வநாயகமாக வரும் அமரேந்திரன், அட்டாக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய்தீனா, மருந்து கேரக்டரில் நடித்திருக்கும் பக்ஸ் என்ற பகவதி பெருமாள், சோனு ஸாவந்தாக நடித்திருக்கும் ஜாஸ்மின் பாஸின், சனந்த் அப்பாவாக நடித்திருக்கும் ஆர்.எஸ். சிவாஜி ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.
''ஒரு பெரிய வேலையை சரியாக செய்ய ஒன்பது சின்ன சின்ன வேலைகளை செய்யணும்''.
''செக்ஷன் டென் த் ஸ்டாண்டர்டு சி ல செக்யூரிட்டியை அரெஸ்ட் பண்றோம்.'' என்ற வசனங்கள் கவர்கின்றன.
அதே சமயத்தில் ''அசையா சொத்து அழிஞ்சி போய்டுச்சு. அசையும் சொத்து அழுகிடுச்சு''.
''இந்த துப்பாக்கிக்கு பேரு கை........சுட்டுக்கிட்டே இருக்கும்'' போன்ற இரட்டை அர்த்த வசனங்களை சரியாகவும், சாமர்த்தியமாகவும் செருகியிருக்கின்றனர். அதனாலேயே சிலர் கரவொலி எழுப்பினர்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். விஷால் சந்திரசேகரின் இசை பொருத்தம். குர்ட்ஸ் ஸ்கெனிடர் பல இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம். இரண்டாம் பாதி ஏன் இவ்வளவு நீளம் என்ற அலுப்பும், சோர்வும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. ரெட் ரோடு பாடல் சரியான இடத்தில் வரவில்லை. சிவஷங்கரின் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது.
காஸ்டிங், கலர் டோன், ஃப்ளேவர், சூழல் என்று எல்லா விதங்களிலும் இயக்குநரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. குறிப்பாக கதையை 2020-ல் நடப்பதாக காட்டுவது லாஜிக், காஸ்டியூம், செட் பிராபர்டி உள்ளிட்ட பலவற்றைப் பற்றி யோசிக்க விடாமல் செய்கிறது.
ஜாஸ்மின் பாஸின் தவிர வேறு எந்த பெண் கதாபாத்திரமும் இல்லை. இந்த துணிச்சலுக்காக இயக்குநர் தீரஜ் வைத்தியைப் பாராட்டலாம்.
ஆனால், ஒரு படத்துக்கு இதுமட்டும் போதுமே?
கதை, திரைக்கதையில் எந்த அழுத்தமும், மாற்றமும் தொங்கலில் விட்டுவிடுவதுதான் நெருடலாக இருக்கிறது. தீரஜ் வைத்தியும், மோகன் ராமகிருஷ்ணனும் இன்னும் கொஞ்சம் சிறப்புக் கவனத்துடன் திரைக்கதையில் மாற்றம் செய்திருக்கலாம். படத்தில் தேவைப்படும் அளவுக்கு டீட்டெயில் கொடுக்காதது பெரும் குறை.
கல்ட் படமாக இல்லையென்றாலும், காமெடி படத்தில் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள்.
மொத்தத்தில் 'ஜில்.ஜங்.ஜக்' கொஞ்சம் காமெடி! கொஞ்சம் கடி!