2.0 அப்டேட்: 2 ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர்கள் சென்னை வருகை

2.0 அப்டேட்: 2 ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர்கள் சென்னை வருகை
Updated on
1 min read

'2.0' படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர்கள் கென்னி பேட்ஸ் மற்றும் ஆரோன் க்ரிபன் இருவரும் சென்னை வந்திருக்கிறார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ரஜினி மற்றும் ஏமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதற்கட்ட படப்பிடிப்பில் காட்சிப்படுத்தி இருக்கிறது படக்குழு.

ரஜினி - அக்‌ஷய்குமார் சம்பந்தப்பட்ட பிரதான காட்சிகளை, விரைவில் தொடங்கவிருக்கும் படப்பிடிப்பில் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக 'டை ஹார்ட்' மற்றும் 'ட்ரான்ஸ்பார்மர்ஸ்' படங்களின் சண்டைக் காட்சிகளுக்கு பணியாற்றிய 'கென்னி பேட்ஸ்(Kenny Bates)' பணியாற்ற இருக்கிறார். தற்போது 'பேட் மேன் Vs சூப்பர் மேன்' படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு பணியாற்றிய ஆரோன் க்ரிபனும் (Aaron Crippen) சென்னை வந்திருக்கிறார்.

இந்த இருவரின் மேற்பார்வையில் '2.0' படத்தின் சண்டைக் காட்சிகளைக் காட்சிப்படுத்த இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகில் இருந்து சண்டை இயக்குநர் சில்வா மற்றும் அவருடைய உதவியாளர்கள் இச்சண்டைக் காட்சியில் பங்குபெற இருக்கிறார்கள்.

இப்படம் முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது. இந்திய அளவில் 3டி தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வரும் முதல் படம் '2.0' என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in