

தெலுங்கில் 'லூசிஃபர்' படத்தின் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'லூசிஃபர்'. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
ராம்சரண், சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள். மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் 'லூசிஃபர்' ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடித்து வருகிறார். மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார்.
ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு சண்டைக் காட்சியுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
2001-ம் ஆண்டு 'ஹனுமன் ஜங்ஷன்' என்ற தெலுங்குப் படத்தின் மூலமாகத்தான் இயக்குநராக அறிமுகமானார் மோகன் ராஜா. தற்போது சுமார் 20 ஆண்டுகள் கழித்து, 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.