

நடிகர் நாசர், 'சோலார் எக்ளிப்ஸ்' என்ற ஹாலிவுட் படத்தில், போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ஓம்புரி, ரஜத் கபூர், அனந்த் மஹாதேவன் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கவுள்ளனர்.
நடிகர் நாசர், பல்வேறு மொழிகளில் 200 படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ளார். அவர் ஆங்கிலத்தில் நடிக்கும் 4-வது படம் இது என்றும், 2-வது ஹாலிவுட் படம் என்றும் அவரது மனைவில் கமீலா தெரிவித்துள்ளார்.
1948-ஆம் வருடம் மகாத்மா காந்தி கொல்லப்பட்டது குறித்து நிலவும் தகவல்களை வைத்து, கற்பனைக் கலந்து எடுக்கப்படவுள்ள படம் இது. தற்போது ரஜினிகாந்துடன் கபாலி படப்பிடிப்பில் நடித்திக் கொண்டிருக்கும் நாசர், பிப்ரவரி மாதக் கடைசியில் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.
மகாத்மா காந்தியை காக்க நியமிக்கப்பட்ட அசோக் என்ற போலீஸ் அதிகாரியாக நாசர் நடிக்கவுள்ளார். காந்தியின் மரணத்தின் போது 3 போலீஸ் அதிகாரிகளின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை இந்தப் படம் பேசவுள்ளது. இந்தப் படத்தில் வின்னி ஜோன்ஸ், அலீஸா நாவல்லீ உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கின்றனர்.
ஜீஸச் சான்ஸ் என்ற நடிகர் மகாத்மா காந்தியாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கரீம் ட்ரையாதியா இயக்கவுள்ளார். பிரஷாந்த் பிள்ளை இசையமைக்கிறார்.