நடிகர் விவேக் கடைசியாகப் பங்கேற்ற ஓடிடி நிகழ்ச்சி: ஆகஸ்ட் 27-ல் அமேசான் ப்ரைமில் வெளியீடு

நடிகர் விவேக் கடைசியாகப் பங்கேற்ற ஓடிடி நிகழ்ச்சி: ஆகஸ்ட் 27-ல் அமேசான் ப்ரைமில் வெளியீடு
Updated on
1 min read

மறைந்த நடிகர் விவேக், மிர்ச்சி சிவாவுடன் பங்கெடுத்துக் கொண்ட ஓடிடி நிகழ்ச்சி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியாகிறது.

நகைச்சுவை நடிகரும், தமிழில் ஏராளமான படங்களில் நடித்தவரும், பத்மஸ்ரீ கவுரவத்தை வென்றவருமான விவேக் மாரடைப்பின் காரணமாகக் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி காலை காலமானார். அவரது திடீர் மரணம் திரையுலகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மறைவுக்கு முன்பாக விவேக் 'அரண்மனை 3', 'இந்தியன் 2' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இவை தவிர, அமேசான் ப்ரைம் வீடியோ தளத்துக்காகத் தயாரிக்கப்பட்ட ’லொல், எங்க சிரி பார்ப்போம்’ என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்றார். இது ஒரு ரியாலிட்டி நகைச்சுவை நிகழ்ச்சி.

'லொல், ஹஸீ தோ ஃபஸ்ஸீ' என்கிற பெயரில் இந்தியில் உருவான நிகழ்ச்சியின் தமிழ்ப் பதிப்பு இது. விவேக்குடன், நடிகர் மிர்ச்சி சிவாவும் நடுவராக இதில் பங்கெடுத்துள்ளார். மாயா எஸ்.கிருஷ்ணன், அபிஷேக் குமார், பிரேம்ஜி, ஹாரத்தி, விக்னேஷ் காந்த், சதீஷ், புகழ், பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஸ்யாமா ஹரிணி, பார்கவ் ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நகைச்சுவையாளர்களாக இந்த நிகழ்ச்சியில் போட்டியிடுகின்றனர்.

வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி இந்த நிகழ்ச்சியின் 6 பகுதிகளும் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அமேசான் தரப்பு வெளியிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in