எங்களுடைய முதல் சர்வதேச விருது: விக்னேஷ் சிவன் - நயன்தாரா நெகிழ்ச்சி

எங்களுடைய முதல் சர்வதேச விருது: விக்னேஷ் சிவன் - நயன்தாரா நெகிழ்ச்சி

Published on

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரித்த ‘கூழாங்கல்’ படத்துக்கு சர்வதேச விருது கிடைத்ததை முன்னிட்டு அந்த விருதுடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கூழாங்கல்’. யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ரோட்டர்டாம் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மிக உயரிய விருதான டைகர் விருதை வென்றது. 2017ஆம் ஆண்டு வெளியான ‘செக்ஸி துர்கா’ மலையாளப் படத்துக்குப் பிறகு இவ்விருதைப் பெறும் இரண்டாவது படம் இது.

தற்போது இந்த விருதைக் கையில் ஏந்தியபடி நயன்தாராவுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதே பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

''எங்களுடைய முதல் சர்வதேச விருதுடன். எங்கள் முதல் தயாரிப்பான ‘கூழாங்கல்’ திரைப்படம் ரோட்டர்டாம் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று இந்த டைகர் விருதை எங்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது. இதை எங்கள் மனதுக்கு நெருக்கமான இடத்தில் வைத்திருக்கும் இந்த வேளையில் இந்த அற்புதமான படத்தை உருவாக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படத்துக்குக் கிடைக்கும் அனைத்து விருதுகளும், ஊக்கங்களும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் தருகின்றன. அதே நேரத்தில் எங்கள் இயக்குநர் தற்போது ரோமானியாவில் தனது அடுத்த விருதைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்''.

இவ்வாறு விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in