

'விசாரணை' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டிய நடிகர் அஜய் கோஷ், 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தில் கொள்ளைக்காரன் வேடத்தில் நடிக்கவுள்ளார்.
இதுபற்றி பேசிய அஜய் கோஷ், "நான் வீரய்யா என்கிற கொள்ளைக்காரனாக நடிக்கவுள்ளேன். படத்தில் அனுஷ்காவின் ராஜ்ஜியத்தில் வாழும் ஒருவன். கடந்த மாதம் கேரளாவில் 5 நாட்கள் படப்பிடிப்பில் நடித்துள்ளேன். மார்ச் மாதம் மீண்டும் படப்பிடிப்பில் இணையவுள்ளேன். மிகவும் சுவாரசியமான பாத்திரம் இது. ரசிகர்கள் என் பாத்திரத்தை எப்படி ஏற்ற்க் கொள்வார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் " என்றார்.
விசாரணையில் தன் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேசும்போது, "அது எதிர்மறையான பாத்திரமாக இருந்தாலும் மக்கள் அதை முழுமனதுடன் வரவேற்றுள்ளனர். இயக்குநருடன் முதல் காட்சியை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, யாருக்கும் என்னைப் பிடிக்காது என நினைத்தேன். ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்தது.
படத்தில் தினேஷை அடிக்கும் காட்சிகளில் நான் அழுதுவிட்டேன். நாங்கள் போலியான தடிகளை பயன்படுத்தியிருந்தாலும் அதை நாங்கள் பயன்படுத்திய வேகம் அதிகம். அந்தக் காட்சிகள் எனக்கு கஷ்டமாக இருந்தது ஆனால் படத்தின் முக்கிய காட்சிகள் அவை என்பதால் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது" என அஜய் கோஷ் கூறியுள்ளார்.