

ரசிகர்கள் புதுமையான சிந்தனைகளை வரவேற்கத் தொடங்கிவிட்டதாக இயக்குநர் மணிரத்னம் தெரிவித்திருக்கிறார்.
மாதவன், ரித்திகா, நாசர், ராதாரவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் சுதா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'இறுதிச்சுற்று'. சசிகாந்த் மற்றும் சி.வி.குமார் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை யு.டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இப்படம் குறித்து இயக்குநர் மணிரத்னம் அளித்திருக்கும் வீடியோ பேட்டியில் படக்குழுவினர் அனைவரையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார். அப்படம் குறித்து இயக்குநர் மணிரத்னம் கூறியிருப்பது "உதவி இயக்குநர் என்பது வேறு ஒரு பணி. இயக்குநரான பிறகு தான் திறமை என்பது வெளியே வரும். இந்தப் படம் பார்க்கும் போது எனக்கு திருப்தியாக இருந்தது. கதை, திரைக்கதையில் ஒரு தெளிவு இருந்தது. நான் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன்.
தமிழ் திரையுலகில் எனக்குத் தெரிந்து குத்துச்சண்டையை முன்னிறுத்தி படங்கள் வந்ததில்லை. அதுவும் ஒரு பெண் குத்துச்சண்டை வீரரை முன்வைத்து செய்தது புதுமையானது. படத்தின் கதை புதுமையானது என்றாலும் அதை கமர்ஷியலாக மக்கள் ரசிக்கும் வகையில் செய்தது, முழுமையாக இருந்தது. தமிழில் 'அலைபாயுதே' படத்தின் மூலம் மாதவன் அறிமுகமாகி இருந்தாலும், தெலுங்கு, இந்தியில் நிறைய பண்ணியிருக்கிறார். அவருடைய வழியில் 'அலைபாயுதே' ஒரு படம். மாதவன் இன்னும் நிறைய தமிழ் படங்கள் பண்ண வேண்டும் என நினைக்கிறேன்.
ரித்திகா நிறைய இயக்குநர் சுதா மாதிரியே இருக்கிறார். முதல் படம் மாதிரியே தெரியாமல், தன்னிம்பிக்கையோடு நடித்திருக்கிறார். குத்துச்சண்டைக்கு தயாரான விதம் எல்லாம் ரொம்ப உணர்ச்சிகரமாக இருந்தது. சில இடங்களில் ரொம்ப அற்புதமாக இருந்தது.
இயக்குநர் என்பது ஒன்று தான். அதில் ஆண், பெண் என்று கிடையாது. நான் பணம் கொடுத்து படம் பார்க்கும் போது, எனக்கு படம் பிடித்திருக்கிறதா என்பது மட்டும் தான் பார்ப்பேன். அப்படத்தை ஒரு பெண் இயக்கி இருக்கிறார் என்றால் அது அற்புதமான விஷயம். அவ்வளவு தான்.
சந்தோஷ் நாராயணின் இசை இளைஞர்களை கவரும் வகையில் இருக்கிறது. அவருக்கு என்று தனித்திறமை ஒன்று இருக்கிறது. நான் படம் பார்க்கும் போது ஒரு ரசிகனாகத் தான் பார்ப்பேன். எடிட்டிங் எப்படி இருந்தது என்று தனித்தனியாக பார்க்க மாட்டேன். சுதாவுடைய படமாச்சே நல்லாயிருக்கணுமே என்ற எண்ணம் வேறு இருந்தது. படம் நன்றாக இருந்தது. அனைத்தும் சரியாக இருந்ததால், படம் முடிந்தவுடன் ஒரு முழு திருப்தி இருந்தது.
இது 'உதிரிப்பூக்கள்' வந்த ஊர். அப்புறம் பாரதிராஜா, மகேந்திரன், பாலசந்தர் அனைவருமே ஒரு மிகப்பெரிய ரோடு போட்டு போய் இருக்கிறார்கள். அதில் இருந்தே ரசிகர்கள் புதுமையான சிந்தனைகளை வரவேற்க தொடங்கவிட்டார்கள். இப்போது உள்ளவர்கள் உலக சினிமா பார்ப்பவர்கள். கடந்த 10 வருடங்களாக நிறைய வித்தியாசமான படங்கள் வந்திருக்கிறது. ரசிகர்கள் அதை ஒத்துக் கொள்கிறார்கள். அது வரவேற்கத்தக்க ஒன்று. தனிப்பட்ட ஒருவருடைய சிந்தனைகள் நிறைய வெளியே வருகிறது.ஒரு கட்டுக்கோப்புக்குள் இல்லாமல் வெளியே வந்து பண்ணுகிறார்கள்.
இப்படம் நன்றாக போய் கொண்டிருக்கிறது. அப்படக்குழு அடுத்த படத்தை சீக்கிரம் பண்ணவேண்டும். அவர்களுக்கு இது தொடக்கம், இன்னும் நிறைய இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் மணிரத்னம் அளித்திருக்கும் வீடியோ பேட்டி:
</p>