'சார்பட்டா' உலகத்தை நேரில் பார்த்திருக்கிறேன்: படக்குழுவினரிடம் நெகிழ்ந்த கமல்

'சார்பட்டா' உலகத்தை நேரில் பார்த்திருக்கிறேன்: படக்குழுவினரிடம் நெகிழ்ந்த கமல்

Published on

'சார்பட்டா பரம்பரை' படக்குழுவினரை தனது அலுவலகத்துக்கு அழைத்துப் பாராட்டியுள்ளார் கமல்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடியில் வெளியான இந்தப் படத்தை விமர்சகர்கள் பாராட்டினார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள்.

பல்வேறு திரையுலக பிரபலங்களும் 'சார்பட்டா பரம்பரை' படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்குத் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தற்போது கமலும் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளனர்.

'சார்பட்டா பரம்பரை' படம் பார்த்துவிட்டு, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் தனது அலுவலகத்துக்கு அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார். படக்குழுவினர் மத்தியில் கமல் பேசும் போது கூறியதாவது:

"'சார்பட்டா' படத்தில் வரும் அந்த உலகத்தை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன், எனக்குத் தெரிந்தவர்கள் என் நண்பர்கள் பலர் பாக்சர்களாக இருந்திருக்கிறார்கள். எனக்குப் படம் பார்க்கும்பொழுது அந்த காலகட்டத்தை நேரடியாகப் பார்ப்பதைப்போல இருந்தது,

'சார்பட்டா' திரைப்படம் மக்களுக்கு நெருக்கமான ஒரு திரைப்படமாக இருக்கிறது, வெற்றிகரமான ஒரு திரைமொழியோடு மக்களை வெகுவாக கவர்ந்து , மக்களிடம் சென்று சேரும் விதமான ஒரு கூட்டு உழைப்பாக அற்புதமான படமாக இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பாராட்டும் வகையில் நடித்திருக்கிறார்கள். நான் மிகவும் ரசித்தேன் .

பா.இரஞ்சித் தனது கருத்துக்களை எளிதாக மக்களிடம் கொண்டுசேர்க்க ஒரு திரைமொழியைக் கையாண்டிருக்கிறார், அது ரசிக்கும் விதமாகவும் , பாராட்டும் விதமாகவும் இருக்கிறது. இயக்குநர் இரஞ்சித் உள்ளிட்ட குழுவினருக்கு எனது வாழ்த்துக்களும் அன்பும்"

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

பா.இரஞ்சித், ஆர்யா, பசுபதி, ஜான் கொக்கென் உள்ளிட்ட அனைவருமே கமலின் பாராட்டால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in