படப்பிடிப்பில் இயக்குநர் சேரன் காயம்

படப்பிடிப்பில் இயக்குநர் சேரன் காயம்
Updated on
1 min read

படப்பிடிப்பின்போது தவறி விழுந்ததில் சேரனுக்குத் தலையில் காயம் ஏற்பட்ட தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஆனந்தம் விளையாடும் வீடு'. கௌதம் கார்த்திக், சேரன், சிங்கம் புலி, சரவணன், சினேகன், விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தின் கதைப்படி வீடு ஒன்று பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டைக் கட்டுவது போன்ற காட்சிகளும் இடம்பெறும். அந்த வீடு கட்டப்படுவது போன்ற எடுக்கப்பட்ட காட்சியில், இயக்குநர் சேரன் கால் இடறிக் கீழே விழுந்தார். அப்போது சேரனுக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக சேரனை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவருக்குத் தலையில் எட்டுத் தையல்கள் போடப்பட்டன. ஆனாலும், அனைத்து நடிகர்களும் இருப்பதால் தன்னால் படப்பிடிப்பு ரத்து ஆகக்கூடாது என்று சேரன் தொடர்ச்சியாக நடித்துக் கொடுத்துள்ளார்.

தற்போது 'ஆனந்தம் விளையாடும் வீடு' படப்பிடிப்பு முழுமையாக முடிந்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in