'உடன்பிறப்பே' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: கதைக்களம் என்ன?

'உடன்பிறப்பே' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: கதைக்களம் என்ன?
Updated on
1 min read

இரா.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கு 'உடன்பிறப்பே' எனத் தலைப்பிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கைப் படக்குழு வெளியிட்டது.

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிதா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் தொடங்கப்பட்டது. ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு.

சூர்யா தயாரித்து வந்த இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வந்தார்கள். இது ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 50-வது படமாகும். ஆகையால், திரையரங்கில்தான் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் படம் குறித்த எந்தவொரு தகவலையும் இதுவரை படக்குழு வெளியிடாமல் இருந்தது.

பெயரிடப்பாமல் இருந்த இந்தப் படத்துக்குத் தற்போது 'உடன்பிறப்பே' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. மேலும், இந்தப் படம் அக்டோபரில் அமேசான் ஓடிடியில் வெளியாகும் என்று சூர்யா அறிவித்துள்ளார். இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

மேலும், அமேசான் நிறுவனத்தின் அறிக்கையில் 'உடன்பிறப்பே' படத்தின் கதைக்களத்தை வெளியிட்டுள்ளார்கள்.

"கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருக்கும் உடன்பிறப்புகள் வைரவன் மற்றும் மாதங்கி ஆகியோருக்கு இடையேயான நிபந்தனையற்ற அன்பின் முக்கியத்துவத்தை 'உடன்பிறப்பே' திரைப்படம் வெளிப்படுத்துகிறது.

நீதிக்காக வன்முறை வழியில் போராட வேண்டும் என வைரவனும், சட்ட விதிகளின் படி விடாமுயற்சியுடன் பயணிக்க வேண்டும் என மாதங்கியின் கணவர் சற்குணமும் வலியுறுத்துகின்றனர். பல ஆண்டுகளாக அவர்களுக்கிடையேயான விரிசலை நீக்கவும், குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவும் மாதங்கி எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகின்றன. இறுதியில் இந்தக் குடும்ப ஒற்றுமைக்காக மாதங்கி எடுக்கும் உணர்ச்சிகரமான முடிவுதான் ‘உடன்பிறப்பே’".

இவ்வாறு அமேசான் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in