

'சார்பட்டா பரம்பரை' படக்குழுவுக்கு இயக்குநர் அட்லி புகழாரம் சூட்டியுள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.
பல்வேறு திரையுலக பிரபலங்களும் 'சார்பட்டா பரம்பரை' படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்குத் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர் அட்லி நேற்று (01.08.21) தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
'' 'சார்பட்டா பரம்பரை' எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அற்புதமான திரைப்படம். படத்துக்காக ஆர்யாவின் கடின உழைப்பை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். படத்தைப் பற்றி ஒவ்வொரு முறை ஆர்யா பேசும்போது, இப்படம் சிறப்பானதாக இருக்கும் என்று நான் அறிந்துகொண்டேன். தற்போது படத்தைப் பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விவரிக்க வார்த்தைகள் இல்லை.
ஆர்யா கபிலனாக வாழ்ந்திருக்கிறார். பாக்ஸிங் காட்சிகளாகட்டும், மன்னிப்பு கேட்டு தாயின் காலில் விழுவதாகட்டும், போட்டியாளரிடம் சவால் விடுவதாகட்டும், இன்னும் சொல்லிக் கண்டே போகலாம். என் நண்பன் ஆர்யாவின் சினிமா வாழ்க்கையில் 'சார்பட்டா பரம்பரை' நிச்சயமாக ஒரு மைல்கல்.
இந்த அற்புதமான படத்தைக் கொடுத்த சகோதரர் பா.இரஞ்சித்துக்கு என்னுடைய வாழ்த்துகள். தமிழ் சினிமாவின் இன்றைய தலைமுறை திரைப்படங்களில் 'சார்பட்டா பரம்பரை' மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படும். வருங் காலங்களில் மக்களால் நினைவுகூரப்படும் படமாகவும் இருக்கும்.
சந்தோஷ் நாரயணன் அண்ணாவின் இசை படத்தின் ஓட்டத்தோடு மிக அழகாகப் பொருந்துகிறது. இப்போதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் ஆகியோரின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது''.
இவ்வாறு அட்லி தெரிவித்துள்ளார்.